மே 2ல் அமைச்சரவை கூட்டம்


முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


அதேபோல, தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது. 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது.


முக்கிய அறிவிப்புகள் என்ன?


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி நடப்பு நிதியாண்டிற்கான,  நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது. 


அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு அக்டோபர் மாதம் முதல் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டு தொடர்பாக பள்ளி பாடநூலில் பாடம் இடம்பெறுவது, பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தை மாநில முழுவதும் விரிவுபடுத்துவது, எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.30 ஆயிரம் ஆக உயர்த்துவது, முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.


அதோடு, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. 


இந்த மேற்கண்ட புதிய திட்டங்கள் குறித்து மே 2ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Karnataka Election: கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்த நீதிபதி..! காரணம் என்ன?