கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால், கர்நாடக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பாக இயங்கி வருகிறது. 


நீதிபதி போட்டி:


கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் நீதிபதி சுபாஷ்சந்திரா ராத்தோடு போட்டியிடுகிறார். விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா சங்கதாலா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரா ராத்தோடு.  நீதிபதியான இவர் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா கோர்ட்டில் 4 ஆண்டுகளும், விஜயாப்புராவில் 2 ஆண்டுகளும் பணியாற்றி இருந்தார். கடந்த ஒரு ஆண்டாக கதக்கில் அவர் பணியாற்றினார்.  அரசியலில் ஈடுபட முடிவு செய்த அவர் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜனதாதளம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியில் சித்தாப்புரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 


இதுபற்றி கூறிய அவர்,  அரசியல் புனிதமானது, ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை என்றார்.  ஜனநாயகத்தின் முக்கிய தூண் சரிந்து கொண்டே வருவதை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை என்று கூறினார்.  அரசியல் மூலமாக சமூகத்தில் மாற்றங்களையும், பலதரப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும் முடியும்.


அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில், தன்னுடைய நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார். நீதிபதி ஒருவர் தனது அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவது பேசுபொருளாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. 


சூடு பிடிக்கும் தேர்தல் களம்


கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டு நிலவுகிறது.  முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர். இந்நிலையில் நட்சத்திர தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக களம் இறக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் அண்மையில் வெளியான நிலையில், பெயர்  பட்டியலில் சில முக்கிய முதலமைச்சர்களின்  பெயர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்தது.


சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, பிரதமர் மோடி 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒருமுறை வந்த மோடி, பந்திப்பூர் வனத்திற்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதோடு, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. முன்னணி தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் என பல தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். அதன் காரணமாக, வரும் நாட்களில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 


மேலும் படிக்க 


PBKS vs RCB IPL 2023 LIVE: 7 விக்கெட்களை இழந்து தடுமாறும் பஞ்சாப் அணி..வெற்றி யாருக்கு!