ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


திண்டுக்கல்லில் சிறப்பு தொழுகை:


நத்தம் கோவில்பட்டியில் உள்ள கோரிமேடு ஈத்கா மைதானத்தில் நத்தம், அசோக் நகர், அண்ணா நகர், முஸ்லீம் மேற்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசலைச் சேர்ந்த ஜமாத்தார்கள் ஒன்று கூடி தக்பீர் ஓதி கோரிமேடு மைதானத்தை சென்றடைந்தனர். அங்கு, முதலில் ஈதுல் பித்ரு சிறப்பு தொழுகை செய்து  பின்னர் குத்பா ஓதப்பட்டது. அப்போது உலக நன்மை வேண்டி பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறி கட்டித் தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக அனைவரும் புறப்பட்டு தெற்குத் தெரு பள்ளிவாசலை அடைந்து அங்கு துஆ ஓதி தக்பீர் கூறி கலைந்து சென்றனர்.


கடற்கரையில் தொழுகை:


ரமலான் திருநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில், ஆண்கள், பெண்கள் என சுமார் 4000 பேர் கலந்து கொண்டனர்.


மாநிலம் முழுவதும் தொழுகை:


இதேபோன்று மதுரையில் தமுக்கம் மைதானத்திலும், திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்திலும், சூரமங்கலம் ஈத்கா  மைதானத்திலும் மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


ஆடு விற்பனை அமோகம்:


ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் பிரியாணி அதிகளவில் செய்வது வழக்கம். இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய சந்தைகளிலும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது.  அதன்படி, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. இதேபோன்று செஞ்சியில் நடைபெற்ற வாரச்சந்தையிலும் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. 


ரம்ஜான் திருநாள்:


இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.


சிறப்பு நோன்பு:


ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நோன்பு காலத்தில் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு சூரியன் மறைவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர். அதன் முடிவில் ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் ரமலான் நாளில் ஏழை மக்களுக்கு அரசி அல்லது கோதுமை போன்ற பொருட்களை இஸ்லாமியர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது.