நடப்பாண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்கள் சேர்க்கப்படாமல் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தாண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்கள் சேர்க்கப்படாதது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வகுப்புகளை விரைவாக தொடங்க மத்திய அரசு கொடுத்த மூன்று வாய்ப்புகளை மாநில அரசு நிராகரித்தது. பல புதிய ஐஐஎம்கள் ஆரம்ப கட்டத்தில் தற்காலிக வகுப்பறைகளில் தொடங்கியுள்ளன. கட்டுமானம் தொடங்கும் போது, 150 நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை மாணவர்களை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் படிக்க மாநில அரசு மறுப்பதற்கு என்ன காரணம். ஐஐஎம் திருச்சி கூட புதியதாக இருந்தபோது என்ஐடி திருச்சியில் இருந்து செயல்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான போக்கு தமிழ்நாட்டில் தீவிர நிலைகளுக்கு செல்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலையின் பதிவுக்கு பதிலளித்து திமுக எம்பி செந்தில் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஒரு செங்கல் அடியில் 150 மாணவ, மாணவிகளை மருத்துவ படிப்பில் அனுமதிப்பது மிக மிக கடினமானது. மதுரைக்கு பின்பு அறிவிக்கப்பட்ட ஜம்மு, ஆந்திரா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் பதில் சொல்லமாட்டார்கள் அவங்க ஓனரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இங்க வந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” எனப்பதிவிட்டுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக இதுவரை 12 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
முன்னதாக தேனி மற்றும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்தது.
1928 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவருவதற்கான பணிகளை மத்திய அரசு பலகாலமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே மருத்துவமனை கட்டுமானத்துக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதில்,’இந்த ஆண்டு மருத்துவமனை கட்டுமானத்துக்காக எந்த செலவும் இல்லை. இதுவரை ஒட்டுமொத்தமாக இதுவரை 12 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜப்பானுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது’ என்றும் பதிலளித்துள்ளது.
முன்னதாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே 50 முதல் 100 மருத்துவ இடங்களை உருவாக்கி மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்தலாம் என தலைமைச் செயலர் இறையன்புவுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தமிழக தலைமை செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிகமான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால், நடப்பாண்டில் 50 முதல் 100 மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம், அதற்கு தேவையான வசதிகள், வகுப்பறைகள், அலுவலகத்திற்குத் தேவையான இடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தற்காலிகமான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய அரசிடம் வழங்கினால் மாணவர் சேர்க்கை நடத்துவதற்காக ஆகும் செலவுகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு, உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் எனவும் மத்திய சுகாதாரத்துறை செயலரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தற்காலிகமான இடத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் 50 மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளதாகவும், எய்ம்ஸ் நிர்வாகத்தின் முடிவிற்காக காத்திருப்பதாகவும் கூறிய நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டது.
’மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே சவால் விடும் தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை’