South TN Rains LIVE: வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு
TN Rains LIVE Updates: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் பாதித்த பகுதிகள், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.
வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலியில் வெள்ள நீர் வடிய தொடங்கியது. இதனால் 3 நாட்களாக பாதிக்கப்பட்ட ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய திருச்செந்தூர் கோயில் பக்தர்களை மீட்கும் பணி தொடங்கியது - நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு இலவச பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் மழைவெள்ளத்தில் சிக்கிய ரயிலில் இருந்த பயணிகள் சென்னை செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணிபுரத்தில் உள்ள பாலம் உடைந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்ட மழை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சிவ்தாஸ் மீனா தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
மழை வெள்ளதால் நெல்லை மாவட்டத்தில் ஆயன்குளத்தில் உள்ள அதிசய கிணறு நிரம்பியது. சுவர் இடிந்து மண் சரிந்ததால் ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மழை பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீ வைகுண்ட ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே ஊழியர்களின் உதவியால் 100 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ வைகுண்டத்தில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் ஏ.வ. வேலுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை,ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கூடுதலாக 81% மழை பதிவாகியுள்ளது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரண பொருட்கள் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 103% கூடுதலாக பெய்துள்ளது.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட நாளை காலை தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து இயக்கப்படும் 9 ரயில்களின் விவரம்:
1. 22667 நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயில்
2. 12634 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்
3. 22658 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில்
4. 17236 நாகர்கோவில் - எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில்
5. 11022 திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில்
6. 16235 தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்
7. 20606 திருச்செந்தூர் - மைசூர் அதிவிரைவு ரயில்
8. 12632 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்
9. 12694 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் பாலகம்: சங்கர் - 9786282104, அதிநவீன ஆவின் பாலகம் கேடிசி நகர்: பால்ராஜ் - 9944442975
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது - முதல்வர் மு.க ஸ்டாலின்
ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்படும் பயணிகளுக்காக வாஞ்சி மணியாச்சியில் இருந்து சென்னை வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை - தூத்துக்குடி இடையே விமான போக்குவரத்து 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை பெய்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் ரயில் போக்குவரத்து முழுமையாக சீரடையவில்லை.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணத மழைப்பொழிவை ஏற்படுத்திய வளிமண்டல சுழற்சி விலகியது.
திருநெல்வேலி அடுத்த வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்துக்கு தடை. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமான இருப்பதால் பாதுகாப்பு கருதி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேங்கியுள்ள மழைநீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை ஓய்ந்ததால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் நீர்திறப்பு குறைக்கப்பட்டு வருகிறது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட செந்தூர் ரயிலில் இருந்து பயணிகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடங்கியது
சென்னையில் இருந்து 100 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மழை பாதித்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பயணி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள எஞ்சிய பயணிகளும் படிப்படியாக மீட்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை டவுன் சந்திப்பில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டு வருகின்றனர்
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள ரயில் பயணிகளை மீட்கும் பணி தொடங்கியது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் போக்குவரத்தை சீரமைக்கவும், சிக்கித் தவிக்கும் பயணிகளை வெளியேற்றவும் தெற்கு ரயில்வே ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது: தெற்கு ரயில்வே
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகர எல்லையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கின்றன.கனமழை காரணமாக தூத்துக்குடியில் சாலைகள் வெள்ளத்தில் மிதப்பதால் வாகனங்கள் துறைமுக சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மழை வெள்ள நிவாரணம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை இன்றிரவு 10.30 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பின்போது மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக வந்த 15,000 புகார்களில் 13,872 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் நாளை காலை 6 மணியில் இருந்து 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருள்களை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
சென்னையில் செயல்பட்டது போன்று வேகத்துடனும், ஒருங்கிணைப்புடனும் செயல்பட வேண்டும். தேவையான இடங்களில் புதிய முகாம்களை கூடுதலாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் இன்னமும் வெள்ள நீரில் சிக்கியுள்ளனர். ராணுவம், NDRF, SDRF உடன் இணைந்து காவல், தீயணைப்பு, வருவாய்த்துறையினர் களப்பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள ரயில் பயணிகள் நாளை மீட்கப்படுவார்கள் என்று உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 133 பேரை மீட்டது ராணுவம்.
மழை, வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 18 லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
பெருமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 90 சதவீதம் மின்விநியோம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. பாளையங்கோட்டை, கேடிசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் உள்ளது.
வெள்ள பாதிப்புகள் குறித்து நாளை இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். மதியம் 12 மணிக்கு நேரம் கேட்டிருந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக டெல்லியில் இருந்து அலோசனை நடத்தி வருகின்றார்.
4 மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து கடற்படை, கடலோர காவல்படை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆளுநர் ரவி அவசர அலோசனை நடத்தி வருகின்றார்.
பாதிப்படைந்த பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளடங்கிய 5,000 பேர் தற்போது களத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள 2,78,557 மின்கம்பங்கள், 10,400 கி.மீ. மின்கம்பிகள் மற்றும் 19,466 மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளது.
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன் என மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தென் தமிழ்நாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்கனவே திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான நீரேற்று மையம் முழுவதும் வெள்ள நீரினால் மூழ்கியதால் ஒட்டுமொத்த நீரேற்று மையம் பழுதடைந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த நீரேற்று மையத்தையும் சீர் செய்ய வேண்டி உள்ளதால் அடுத்த 15 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாது என கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கமலா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் ஒரு வீட்டில் மலைப்பாம்பு வந்துள்ளது. இதனை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் உள்ள போக்குவரத்து பணிமனையில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பேருந்துகளை இயக்குவதிலும், ஓட்டுநர்கள் போக்குவரத்து பணிமனைக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க ஹெலிஹாப்ட்டர்கள் விரைத்துள்ளது.
விருதுநகர் மாவட்ட மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரிக்கு வழிப்பட்டிற்காகச் சென்ற பக்தர்கள் வெள்ளத்தினால் மலையிலேயே சிக்கி இருந்தனர். மலையில் சிக்கிய 120 பக்தர்களை கயிறு கட்டி வனத்துறையினர் மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரி நம்பியாற்றில் முதலை குதிக்கும் வீடியோ வெளியாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லையில் பெரிய கோவில் பகுதியில் ஒரு வீடு இடிந்து விழும் காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்கள் மனதில் சோகத்தையும் பரிதவிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களது வீடு இடிந்து விழுந்த காட்சிகளைப் பார்க்கும் குடும்பத்தார் கதறி அழுகின்றனர்.
மாஞ்சோலை சாலைகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெல்லை மாவட்ட களக்காடு சிங்கிகுளம் கிராமத்தில் உள்ள குளம் உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஆழ்வார் குளம் பகுதியில் உள்ள சாலைகளை வெள்ள நீர் அடித்துச் சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை இருதைய நகர் பகுதியில் பொதுமக்களே மீட்புப் பணியில் களமிறங்கி செயல்பட்டு வருகின்றனர்.
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டு இருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் வெள்ள நீர் நின்றதால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 2 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ரயில்வேதுறை ஏற்படுத்தித் தரவில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்க்காத கனமழையால் பாதிப்பு பெருமளவுக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து உதவிகளும் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் 36 கிராமங்கள் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் பேசவும் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் முதலமச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
கனமழை காரணமாக ஜோலார் பேட்டையில் இருந்து நாளை காலை 5.15 மணிக்கு ஈரோடு செல்லும் ரயில் (06845), கோவையில் இருந்து நாளை காலை 6 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் ரயில் (16322) மற்றும் ஈரோட்டில் இருந்து நாளை மாலை திருச்சி செல்லும் ரயில் (06612) என மொத்தம் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்காசியில் உள்ள பாப்பான் கால்வாயில் வெள்ள நீர் கரையைக் கடந்து குடியிறுப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தென் மாவட்டங்களில் தொடரும் ரெட் அலர்ட் காரணமாக மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களிலும் பொதுமக்கள் பால் வாங்க ஆவின் பால் நிலையத்தில் அதிகப்படியாக குவிந்து வருகின்றனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களையும், இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் மிகவும் அவசியமின்றி வெளியே வராதீர்கள். அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுரைகளை தயவுசெய்து கடைபிடிக்கவும். மத்திய, மாநில அமைப்புகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் மழை நீட் புகுந்துள்ளதால் அலுவலகத்தில் இருந்து கோப்புகளை அதிகாரிகள் வேறு அறைகளுக்கு மாற்றி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பால் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு தரப்பில் பால், பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பவுடர் உள்ளிட்டவைகள் தென் மாவட்டங்களில் விநியோகிக்க அனுப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக பாலினை வாங்கிச் செல்வதால்தான் இந்தத் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என கூறப்படுகின்றது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில் மழைவெள்ளம் சூழ்ந்து குடியிறுப்புகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் படகுகள் மூலம் மூட்கப்பட்டு வருகின்றனர்.
கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செல்போன் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவட்டங்களில் உள்ள உறவினர்கள் திருநெல்வேலியில் உள்ளவர்களை தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் ஏற்கனவே மழை வெள்ள பாதிப்புகளைச் சந்தித்த நிலையில், தற்போது தென் தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.
மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்களை மக்கள் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலிக்கு 1077, 0462 2501012 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1077, 0461 2340101 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 81485 39914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த
கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 946 மிமீ மழை பெய்து சாதனை படைத்துள்ளது, 1992ல் 965 மிமீ மழை பெய்த காக்காச்சி (மாஞ்சோலை)க்குப் பிறகு இரண்டாவது அதிக மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் "வாட்ஸ்அப்" எண் மற்றும் "டிவிட்டர்"-ல் பதிவுகளை தெரிவிக்கலாம் - தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
கனமழை காரணமாக தூத்துக்குடி விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் தமிழகம் , குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி , நெல்லை , தூத்துக்குடி , சிவகாசியில் கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்கிறது - வானிலை ஆய்வாளர் பாலசந்திரன்
திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 81485 39914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 135% கூடுதலாக பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் சமவெளி பகுதியில் 24 மணிநேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியது இதுவே முதல்முறை - வானிலை ஆய்வாளர்
தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு தொடர்பாக 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம்: மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் வெள்ளப் பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மீட்புப் பணிகளுக்கு உடனடியாக போதுமான குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என சு. வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மழை, வெள்ளத்தால் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை முடங்கியது.
தென்காசியில் பெய்துவரும் தொடர் கனமழையால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி, விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் தேவைக்கேற்ப தென் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து 32 ஆயிரம் கன அடி நீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீரும், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடிமுடியாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து 3500 கன அடி நீர் என தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் காட்டாற்று வெள்ளம், குளங்களில் இருந்து வெளியேறும் நீர், மழை நீர் என காலை முதல் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. இது 80 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது
கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்துகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பகல் மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்யும் கனமழையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டியளித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர், உடனடியாகக் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி கோயிலின் உட்பிரகாரத்தில் மழை நீர் புகுந்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான சாப்டூர், சதுரகிரி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாப்டூர் கேனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாப்டூரில் உள்ள சுமார் 190 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட பெரியகுளம் கண்மாய் ஒரே நாளில் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சதுரகிரி வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த பக்தர்கள் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை - தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். 24*7 முகாம்கள் தயார் நிலையில் இருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்
தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.
நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 663 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக மூலக்கரைப்பட்டியில் 59 செ.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு இடங்களிலும் 35 செ.மீ., மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 42 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 41 செ.மீ., சேரன்மகாதேவியில் 40 செ.மீ., மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு வரும் நீர் வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியை அடுத்த மணிமுத்தாறு அணையில் தண்ணீர் நிரம்பி ஓடும் அழகிய காட்சி வெளியாகியுள்ளது.
சென்னையில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி தென்மாவட்ட மக்களை காப்போம்; இது உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக திருநெல்வேலியில் கனமழை பெய்து வரும் நிலையில், திருநெல்வேலி ரயில் நிலையத்தை மூழ்கடித்தது மழைநீர்.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த உதயநிதி ஸ்டாலின் நேரில் செல்கிறார். சேலம் நிகழ்ச்சி முடிந்து கோவையில் இருந்து உதயநிதி சென்னை செல்ல இருந்த நிலையில் சென்னை நிகழ்ச்சிகளை ரத்து செய்து நெல்லை செல்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த உதயநிதி ஸ்டாலின் நேரில் செல்கிறார். சேலம் நிகழ்ச்சி முடிந்து கோவையில் இருந்து உதயநிதி சென்னை செல்ல இருந்த நிலையில் சென்னை நிகழ்ச்சிகளை ரத்து செய்து நெல்லை செல்கிறார்.
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான ஏரி,குளங்கள் நிரம்பி உள்ளது. இதில் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளநீர் செல்கிறது இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில்கள் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
1) 06685 திருநெல்வேலி - செங்கோட்டை - காலை 7 மணி
2) 06682 செங்கோட்டை - திருநெல்வேலி - காலை - 6:40
3) 06681 திருநெல்வேலி - செங்கோட்டை - காலை - 9:45
4) 06684 செங்கோட்டை - திருநெல்வேலி - காலை 10:00
5) 06687 திருநெல்வேலி - செங்கோட்டை - மதியம் 1:50
தேனியில் பெய்த தொடர் மழை எதிரொலி பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி , கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
நெல்லை குன்னத்தூர் - டவுண் செல்லும் சாலையில் உள்ள 4 மின்கம்பங்கள் நெல்லை கால்வாயில் சரிந்து விழுந்தது.
நெல்லையில் நேற்று முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் புகுந்து வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது.
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் முருகன் கோவில் அருகே கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து சிவக்குமார் (59) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். இவரது உடலை மீட்கும் பணி நடைபெற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. வீடு இடிந்து விழுந்து முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையேயான ரயில் வழித்தடம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி கருணாநிதி எம்.பி, தனது வாட்ஸ்ஆப் செயலி மூலம் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள பக்கத்தில் உதவி எண்யை +91 80778 80779 அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அதில் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டியில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதீத கனமழையாக 95 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Background
திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்து வருகிறது. நேற்று (டிசம்பர் 17) அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் சூழலை கருத்தில் கொண்டு 4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து போக்குவரத்து நீர் சூழ்ந்துள்ளதால் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற மாவட்டங்களில் இருந்து மீட்பு படையினர், தூய்மை பணியாளர்கள் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர்.
காயல்பட்டினத்தில் பேய் மழை:
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 668 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு காயல்பட்டினத்தில் மட்டும் 93 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதன்படி, அந்த பகுதியில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை காட்டிலும், அதிகமான மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். 1992 இல் காக்காச்சி (மாஞ்சோலை)-யில் மதிவான பதிவான 965 மில்லி மீட்டர் மழைக்கு அடுத்த இரண்டாவது அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.
பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதோடு, இன்று பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அதில் பயணம் மேற்கொண்ட மக்கள் வீடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். தாழ்வான பகுதியில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
- நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 663 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக மூலக்கரைப்பட்டியில் 59 செ.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு இடங்களிலும் 35 செ.மீ., மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 42 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 41 செ.மீ., சேரன்மகாதேவியில் 40 செ.மீ., மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -