சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். இதில் சித்த மருத்துவ முறையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைக்கப்படும் என்று  நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அவரது அறிவிப்பிற்கு தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் பிச்சையா குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ நன்றி! நன்றி! நன்றி! சித்த மருத்துவத்திற்கு தனி பல்கலை கழகம், பழனி சித்த மருத்துவ கல்லூரி அறிவித்த தமிழக முதல்வருக்கும், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு திட்ட குழு உறுப்பினர்கள் குறிப்பாக சித்த மருத்துவர் கு.சிவராமன், மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை செயலாளருக்கும், இந்திய மருத்துவ துறை இயக்குனருக்கும் சித்த மருத்துவர் சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் சமர்பிக்கப்படுகிறது. “ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், “கருணாநிதி தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைக்க திட்டமிட்டார். அதற்கான உரிய நிலமும் கண்டறியப்பட்டது. அதற்கு பின், இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப் போல சித்தாவிற்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைகழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென முதல்கட்ட நிதியுதவியாக ரூபாய் 2 கோடி வழங்கப்படும்.” இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.


மேலும், மாநிலத்தில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சரின் அறிவிப்பில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


TN Budget 2021 Live Updates: கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு: பிடிஆர் பட்ஜெட் உரை