தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. தலைமையிலான அரசு கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்முறையாக பொறுப்பேற்ற பிறகு, அவர் தலைமையிலான அரசு இன்று தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதிநிலையை சீர்படுத்துவோம் என்று மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பேச ஆரம்பித்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் எழுந்து பேச தொடங்க, அதற்கு பேரவைத் தலைவர் வாய்ப்பு வழங்கவில்லை,அப்போது அதிமுக உறுப்பினர்கள் மைக் கொடுக்க சொல்லி கோஷமிட்டனர், கோஷமிட்டவர்களை இருக்கையில் அமர சொல்லி சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்திய நிலையில், பத்துக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து மைக் கொடுக்க சொல்லி கோஷமிட்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்க சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில் தன் கையில் வைத்திருந்த குறிப்பை தொடர்ந்து வாசித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளி நடப்பு செய்வதாக அறிவித்து அதிமுகவினர் அனைவரும் வெளியேறினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டமன்ற தேர்தலின் போது 500 க்கும் மேற்பட்ட நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை திமுக தந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்போகும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த விடியா அரசு.
நீட் தேர்வு ரத்துக்கு தீர்வு காணமுடியாததாலும், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் வெற்று விளம்பர அறிக்கையை கண்டித்தும், நமது அம்மா பத்திரிகை அலுவலகத்தில் சோதனை என்ற பெயரில் ஒரு நாள் பத்ரிகையை வெளியிட முடியாமல் தடுத்ததற்காகவும், ஊதாரித்தனமான முன்னாள் அரசு என்று காழ்புணர்ச்சியுடன் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை கண்டித்தும், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பொய் வழக்குகளை போடுவதையும் கண்டித்து பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்
பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அறிய: