முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆகியோரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் ஆதரவாளரும், சாட்டை யூடியூப் சேனலின் நிர்வாகியுமான சாட்டை துரைமுருகனுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஜாமீன் வாழங்கி உள்ளது. சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தன்னை மிரட்டியதாக திருச்சியை சேர்ந்த கார் பழுது நீக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சீமான் ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்கு வினோத் மன்னிப்பு கேட்கும் வீடியோவை  சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

 


 


 

இந்த வழக்கில், யூ டியுபர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் வினோத், மகிழன் சந்தோஷ், சரவணன் ஆகியோர் கடந்த ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டு முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வருக்கும் கடந்த ஜூன் 15ம் தேதி பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு ஆகியோரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக தி.மு.கவை சேர்ந்த வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு துரைமுருகன் கைது செய்யப்பட்டார். 

 


 

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி யூடியூபர் சாட்டை துரைமுருகன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்