Keezhadi Excavation: கீழடி அகழாய்வு: கொந்தகையில் இரும்பு வாள் கண்டெடுப்பு !

”முதுமக்கள் தாழியில் இரும்பு வாளுடன் புதைக்கப்பட்டால் அவர் ஒரு வீரனாக இருந்திருக்கலாம்” என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement
சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தமிழ்நாடு தொல்லியல்துறை துவங்கியது. இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கதிரேசன் - சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழைமையான ஈமக்காட்டில்  முதுமக்கள் தாழி, எலும்புகள் கிடைத்தன.

6-ம் கட்ட அகழாய்வுப் பணியின்போது 75 செ.மீ அளவுள்ள குழந்தையின் முழு எலும்புக் கூடு கிடைத்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து  ஒரு குழந்தையின் எலும்பு ஒன்று 95 செ.மீ அளவில் கிடைத்தது பரபரப்பாக பேசப்பட்டது.  கீழடியில் நடைபெற்று வரும் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழியில் மனித எலும்பு கூடு கண்டறியப்பட்டது. 7-ம் கட்ட அகழாய்வில் இதுவரை முதுமக்கள் தாழியுடன் மனித எலும்பு கூடுகள்,  மண் பானை, வட்டில் மூடிகள் , சங்கு வளையல்கள், பருகு நீர் குவளை,  அகண்ட வாய் கின்னம், பகடைக்காய், உழவுக்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளை, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் ஓடு, வட்ட வடிவிலான சுடுமண்ணால் செய்யப்பட்ட வளையம், தங்க ஆபரண கம்பி, சூது பவள மணிகள் உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

தொன்மையான மனிதர்களின் இன மரபியலை அறியும் வகையில்  கொந்தகையில் மேற்கோள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ஏற்கெனவே  இரண்டு முதுமக்கள் தாழியுடன் கூடிய மனித எலும்பு கூடுகள் மற்றும் தரையில் புதைக்கப்பட்ட நிலையில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ள. கொந்தகையில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுடன் கூடிய முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் முதுமக்கள் தாழி ஒன்றில் மர கைப்பிடியுடன் கூடிய வாள் ஒன்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள்...," கீழடி அகழாய்வின் தொடர்ச்சியில் கொந்தகை மட்டும் தான் பழமையான ஈமக்காடு. இங்கு மனிதர்கள் புதைக்கப்படும் போது ஒவ்வொரு நபர்களுக்கு வெவ்வேறு முறையில் புதைக்கப்பட்டுள்ளனர். தாழியை அருகே வைத்து கூட புதைத்துள்ளர். அதே போல் பயன்படுத்திய பொருட்களுடன் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனித்துவத்தை உணர்த்த சடங்குகள் செய்துள்ளனர்.


இந்நிலையில் ஒரு மர கைப்பிடியுடன் வாள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியம். வாளுடன் புதைக்கப்பட்டவர் ஒரு வீரனாக இருந்திருக்கலாம். அவரின் பெருமை சொல்ல அவ்வாறு புதைக்கப்பட்டுள்ளார். மரக்கைப்பிடி 6 செ.மீ. நீளமும், வாள் 40 செ.மீ. நீளமும் இருக்கின்றன. அந்த முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள், சுடுமண் பாத்திரங்கள் இருந்தன. இந்த வாளை ஆய்வு செய்ய அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிகல் ஆய்வகத்துக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தொல்லியல் துறையினர் தகவலை ஆவணப்படுத்தும் போது தான் முழுதகவல் வெளிவரும்" என்றனர்.
 
மேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
Continues below advertisement