சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பத்து இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி அதில் ஒன்பது இடங்களை வெற்றி பெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக் குழு தலைவராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நிகழ்ச்சி ஒன்றில், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்றாலும் தயாராக இருக்கவேண்டும் என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும், உள்ளாட்சி தேர்தலில் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் பிரதான கட்சிகளாக விளங்கி வரும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளை உள்ளாட்சித் தேர்தலுக்காக தயார்படுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் "உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்பொழுது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய செல்வபெருந்தகை, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் நிர்வாகிகள் மனு வாங்க வேண்டும் என்றும் “ஒருவேளை திமுக கட்சியுடன் கூட்டணி அமையாத பட்சத்தில் ” ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தனித்து நின்று போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியதால் மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் பேசுகையில் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் பதிவுகளுக்கு கட்சி சின்னங்கள் பயன்படுத்துவது கிடையாது எனவே அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஏபிபி செய்தி நிறுவனம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, எப்போதும் என்று கூட்டணியை நம்பி இருக்கக் கூடாது எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் தான் இவ்வாறு கூறியதாக விளக்கம் அளித்தார்.
மேலும் செய்திகள் படிங்க அன்று பாம்பே வரை ஏற்றுமதியான கருங்குழி வெற்றிலை..! காய்ந்து காணாமல் போன கதை என்ன ?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X