குற்றவாளிகளை கைது செய்ய 25 ரிமோட் மூலம் விலங்கிடும் கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். குற்றவாளிகளை கைது செய்யும் போது குற்றவாளிகளால் காவலர்கள் தாக்கப்படும் சம்பவங்களை தடுக்க ரிமோட் மூலம் விலங்கிடும் சாதனங்கள் மூலம் குற்றவாளிகள் மீது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாக்கவும், சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.75.07 லட்சம் செலவில் 25 ரிமோட் மூலம் விலங்கிடும் கருவிகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு சீருடைப் படியாக ஆண்டுதோறும் ரூ.4,500
சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர், துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, காவலர்களுக்கு சீருடைப் படியாக ஆண்டுதோறும் 4,500 ரூபாய் வழங்கப்படும், மற்ற காவல் பிரிவுகளைப் போன்றே, சிறப்புக் காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
காவலர் அங்காடி மற்றும் காவலர் மருத்துவமனை வசதிகள் ஊர்காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை பணியாற்றுவோருக்கு எரிபொருள் படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறினார்.
சென்னையில் 2,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்
மேலும், காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி உதவித்தொகை ரூ.30,000-மாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 2,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் சென்னை பெருநகரில் வானகரம், தாம்பரம் ஆணையரக பகுதியில் மேடவாக்கம், ஆவடி ஆணையரக பகுதியில் புதூர் ஆகிய 3 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும், தீயணைப்புத்துறையில் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முக்கிய அறிவிப்புகள்
மானியக்கோரிக்கை விவாதத்தின் போது தமிழக அரசு சார்பிலும், 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலினாலும் சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, குடும்பதலைவிகளுக்கு அக்டோபர் மாதம் முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது, பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தை மாநில முழுவதும் விரிவுபடுத்துவது, எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.30 ஆயிரம் ஆக உயர்த்துவது, உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு
இந்நிலையில், இன்று நடைபெற்ற உள்துறைக்கான மானியக்கோரிக்கை விவாதத்துடன், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. அதைதொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் படிக்க,