பொறியியல் தமிழ் மொழிப் பாடத் தேர்வை ஆங்கிலத்தில் எழுத அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழைக் கட்டாயமாக்கியதன் நோக்கத்தையே சிதைத்துவிடும் எனக் கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, தன்னாட்சி பெறாத பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் முதல் இரண்டு செமஸ்டர்களில் இந்தப் பாடங்கள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்காக நடப்பாண்டு இளநிலை பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டின் முதல் செமஸ்டரில், 'தமிழர் மரபு' என்ற பாடமும், இரண்டாவது செமஸ்டரில் 'தமிழரும் தொழில்நுட்பமும்' என்ற பாடமும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கிடையே முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

Continues below advertisement

இதில், தமிழர் மரபு பாடத்தாளுக்கான தேர்வு இன்று  (ஏப்.21) நடத்தப்பட்டது. எனினும் கட்டாயத் தமிழ்மொழிப் பாடத் தேர்வை ஆங்கிலத்தில் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வின் வினாத்தாளில் தமிழர் மரபு என்ற பாடத்தாளின் தலைப்பு கூட தமிழில் அச்சிடப்படவில்லை எனவும் Heritage of Tamils  என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருந்தது.

என்ன காரணம்?

பெரும்பான்மையான மாணவர்கள் பொறியியலை ஆங்கிலத்தில் படிப்பவர்கள் என்பதால், தமிழ் பாடத் தாளையும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதித்ததாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இது தமிழைக் கட்டாயமாக்கியதன் நோக்கத்தையே சிதைத்துவிடும் எனக் கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய முடியும்; தமிழை ஒரு பாடமாக படிக்காமல் கல்லூரிப் படிப்பை படிக்க முடியும் என்ற நிலை தமிழகத்தில் இன்றும் நிலவுகிறது. இத்தகைய சூழலில் இனி எவரும் தமிழை ஒரு பாடமாக படிக்காமல் பொறியியல் படிப்பை நிறைவு செய்ய முடியாது என்ற நிலை கட்டாயப் பாட அறிவிப்பின்மூலம் உருவாக்கப்பட்டது.  ஆனால், இப்போது தமிழ் பாடத்தேர்வை ஆங்கிலத்தில் எழுத அனுமதித்ததன் மூலம் அந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சிதைக்கப்பட்டு விட்டன.

தமிழ்நாட்டு மாணவர்களின் தாய்மொழி தமிழ் என்பதால், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் தாய்மொழியான தமிழில் தேர்வெழுத அனுமதிப்பது  வழக்கமானது. இந்த தளர்வு கூட மொழிப்பாடங்களுக்கு பொருந்தாது. ஆங்கில மொழித் தேர்வை தமிழில் எழுத எந்த கல்வி நிறுவனமும் அனுமதிக்காது. அவ்வாறு இருக்கும் போது தமிழ் மொழிப்பாடத் தேர்வை மட்டும் ஆங்கிலத்தில் எழுத எவ்வாறு அனுமதிக்க முடியும்? தமிழர் மரபு பாடத்தாளில் கேட்கப்பட்ட  செம்மொழி, தெருக்கூத்து, நடுகல் போன்றவை குறித்து தமிழில் தான் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கும். அவ்வாறு தமிழில் நடத்தப்பட்ட பாடங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு எழுத முடியும்? தமிழில் நடத்தப்பட்ட பாடங்களை புரிந்து கொண்ட மாணவர்களால் அதை தமிழில் எழுத முடியாதா?

இப்போது தமிழ்ப் பாடத் தேர்வையே ஆங்கிலத்தில் எழுத அனுமதித்தால், எதற்காக கட்டாயத் தமிழ்ப் பாடத்தை தமிழ்நாடு அரசும், அண்ணா பல்கலை.யும் அறிமுகம் செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கிடையே, தமிழ் பாடத்தேர்வை மாணவர்கள் தமிழிலேயே எழுதுவதை அண்ணா பல்கலைக் கழகம் உறுதி செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் எழுதிய மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.