7ஆம் நூற்றாண்டில் ஆண்ட பாண்டிய இளவரசன் ரணதீரன் ஆட்சியை எதிர்க்கும் சிறு இனக்குழுவான எயினர் குடியின் முயற்சி, போராட்டம் மையப்படுத்தி எடுக்கப்பட்ட யாத்திசை திரைப்படம் இன்று (ஏப்.21) வெளியாகியுள்ளது.
போர் எவ்வாறு தேவரடியார்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது, பாண்டியர்களுக்கு எதிராக எயினர், சோழர்களின் கிளர்ச்சி, இவற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. வீனஸ் இன்ஃபோடைன்மென்ட், சிக்ஸ்ஸ்டார் எண்டெர்டெய்ன்மெண்ட்டின் ஜே.ஜே.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க, தரணி ராசேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சேயோன், சக்தி மித்ரன், ராஜலட்சுமி, சமர், ஜமீல், சுபத்ரா என பல புதுமுக நடிகர்கள்,குரு சோமசுந்தரம், செம்மலர் அன்னம், வைதேகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்காலத்தில் புழங்கிய சொற்கள், தமிழ், போர்முறை, ஆடை ஆபரணங்கள் என பல மெனக்கடல்களுடன் புதுமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், முன்னதாக படத்தின் ட்ரெய்லர் மற்றும் மேக்கிங் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தன.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள யாத்திசை படம் பார்த்து ட்விட்டர்வாசிகள் சொல்லும் கருத்து என்ன எனப் பார்க்கலாம்.
கொற்றவை பூஜை, 7ஆம் நூற்றாண்டு தமிழ் கலாச்சாரம், ஆக்ஷன் காட்சிகள், போர்க்காட்சிகள் ஆகியவை மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர்வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட யாத்திசை படத்துக்கு அதிகப்படியான ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்படவில்லை என்றும், பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் இனி தான் படம் பார்க்கவேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.