ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2000 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மண்டபம் பகுதியில் மன்னார் வளைகுடா கடலில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மனோலி தீவு அருகே நடுக்கடலில் 15 கி.மீ தொலைவில்  நாட்டுப்படகு ஒன்று நங்கூரமிட்டு நின்றிருந்தது. அதனை சோதனை செய்தனர். அப்போது படகில் 200 பைகளில் 2000 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அந்தப் படகில் ஆட்கள் யாரும் இருக்கவில்லை. மேலும் படகில் பதிவு எண்ணும் இல்லாததால் படகு உரிமையாளர் யார்?, கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு 8 கோடி ரூபாயாக இருக்கலாம் என கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.






 சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடல் அட்டைகளுக்கு அதிக தேவை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பல ஆசிய நாடுகளில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கடல் அட்டைகள் கடல் சுற்றுச்சூழலை சமநிலையில் வைக்க உதவுகிறது. இந்நிலையில் அவற்றை அழிந்து வரும் இனமாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இல் பட்டியலிட்டுள்ளது. மேலும் அவற்றைப் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நீண்ட உருளை வடிவில் வெள்ளரிக்காய் போன்று தோற்றம் கொண்டுள்ளதால்  கடல் வெள்ளரி( Sea Cucumber) என்றும் அழைக்கப்படுகிறது. 


நல்ல ஆரோக்கியமான கடல் அட்டைகள் தமிழக கடற்பகுதிகளில்தான் அதிகம்  கிடைப்பதால் தமிழகத்தில் இருந்து இலங்கைப் பகுதிகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் அவை கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


இதனையடுத்து 15 கி.மீ தொலைவில் நாட்டுப்படகை நிறுத்தி, கடலோர காவல் படையினரைக் கண்டதும் தப்பிச்சென்றது யார் என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இதையும் படிக்க:


Online Sperm: ஆன்லைனில் விந்தணு... கருத்தரிப்பு கிட்... ‘இ-குழந்தை’ பெற்ற பெண்


Punjab Dalit Politics: முதல் தலித் முதல்வர்... பஞ்சாப் தலித் அரசியல் ஒரு பார்வை!