அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் நீண்ட நாட்களாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது.



 

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. என்றும் விளக்கமளிக்கப்பட்டது. ஃபோர்டு தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களுக்கும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



 

தொழிற்சங்கத்தினரிடம்  நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் ஃபோர்ட் நிறுவனத்தின் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஃபோர்ட் நிர்வாகத்திடம் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த வாரம் திங்கள் கிழமை, நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கையை ஏற்க ஃபோர்ட் நிர்வாகம் மறுத்தது. இதனால் பணி பாதுகாப்பு தொடர்பாக அரசிடம் கோரிக்கையையும், மற்ற தொழிற்சங்களுடன் இணைந்து போராட்டம் நடத்த ஃபோர்ட் தொழிலாளர்கள் திட்டமிட்டனர்.

 

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மறைமலை நகர் ஃபோர்ட் தொழிற்சாலையில் எக்கோ ஸ்பாட் கார் உற்பத்தி பணிகள் தொடங்கியது. உற்பத்தி பணிகளில் கடந்த இரண்டு நாட்களாக நிரந்தர தொழிலாளர்கள் 2700 பேர், ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற அவசர பேச்சுவார்த்தையில் ஃபோர்ட் இந்தியாவின் சென்னை தொழிற்சாலையின் அதிகாரிகள் ஆண்ட்ரியா, ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



 

தொழிற்சங்கம் சார்பில் 5 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பணி பாதுகாப்பிற்கான உத்தரவாதம் ஃபோர்ட் நிறுவனம் வழங்க வேண்டும் என்கிற தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு மீண்டும் ஃபோர்டு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், நிரந்திர தொழிலாளர்கள் 2700 பேர், உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதியம், இரவு உணவுகளை உட்கொள்ளாமல் கார் உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை காட்டுவதாக தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


ஃபோர்டு இந்தியா சொத்துக்களை வாங்க முன்வந்த எம்.ஜி


ஃபோர்டு  இந்தியா நிறுவனச் சொத்துக்களை வாங்க எம்.ஜி மோட்டார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. எம்.ஜி மோட்டார் நிறுவனம், ஃபோர்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை ஆர்மபக் கட்டத்தில்தான் இருப்பதாகவும், வரும் நாட்களில் உறுதியான தகவல்கள் வெளியாகும் என்றும் அறியப்படுகிறது.