பஞ்சாப் முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சுதந்திர இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பதவியேற்றது இதுவே முதன் முறையாகயும்.
இந்திய மாநிலங்களில் அண்ணல் அம்பேத்கருக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்தது பஞ்சாப் தலித் சீக்கியர்கள். தோபா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் (குறிப்பாக ஜலந்தூரில்) அம்பேத்கர் புகைப்படம் இல்லாத வீடுகளை காண்பது அரிது. இருப்பினும், சாதி ஒடுக்குமுறையில் இருந்து விடுபட புத்த மதத்திற்கு மாற வேண்டும் என்ற அம்பேத்காரின் அழைப்பை பஞ்சாப் சீக்கியர்கள் கடைசி வரையில் ஏற்றுக் கொள்ள வில்லை.
மேலும், 1984 இல், தலித் மக்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கிய கான்ஷி ராமம் பிறந்ததும் பஞ்சாப் ரோபார் மாவட்டத்தில் தான். பொதுவாக, தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உருவாகும் தலித் கட்சிகளுக்கு தலித் மக்கள் ஆதரவு அளிப்பது வழக்கம். உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த பெரும்பாலான தலித் மக்கள் மாயாவதி (பகுஜன்சமாஜ்) கட்சிக்குத் திரும்பினர். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கும், அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தங்களது ஆதரவை வழங்கினர். ஆனால்,பஞ்சாபில் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி தலித் மக்களிடையே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பஞ்சாபில் பகுஜன்சமாஜ் கட்சி முகம்தெரியாமல் போனது.
இந்திய மாநிலங்களில், பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிக விழுக்காட்டுடன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட,சாதகமான அரசியல் சூழல் இருந்தும், பஞ்சாபில் தற்போதுதான் தலித் சமூகத்தை சீக்கியர் ஒருவர் முதல்வராக பதவியேற்றுள்ளார். எனவே, இந்த முரண்களை புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகப் படுகிறது.
மக்கள் தொகை: பஞ்சாப் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையான 2.77 கோடியில், இந்து மற்றும் சீக்கிய சமயம் சார்ந்த தலித் சமூகத்தினரின் மக்கள் தொகை 88.60 இலட்சமாக ஆக உள்ளது. இது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 31.91% விழுக்காடாகும்.
பொதுவாக, ஜனநாயக அரசியலில், வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட சமூகம் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். உதாரணமாக, தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் (OBC -அரசியல்) அரசியல் அதிகாரம் செலுத்தி வருகிறது. ஆனால், பஞ்சாபில் இந்த வழக்கம் முற்றிலும் தலைகீழாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் தற்போது தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மாநிலத்தின் உயரிய பதவியில் அமர்ந்துள்ளார்
தலித் மக்களின் சமூக நிலை: மற்ற மாநிலங்கள் போல் அல்லாமல், பஞ்சாபில் சாதிய வன்முறைகள் குறைந்து காணப்படுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.
முதலாவதாக, குரு கிரந்த் சாஹிப் நூலில் கூறப்பட்டுள்ளவாறு மனிதகுலத்தின் ஒற்றுமையை சீக்கியம் முன்னெடுத்தது. சீக்கிய குருமார்கள் உருவாக்கிய சங்கத், லாங்கர் (உணவு வழங்கும் சமையல் கூடம்) ஆகியவை தீண்டாமையின் இறுக்கமான பிடியைத் தளர்த்தின.
இரண்டாவதாக, பஞ்சாபில் பல்வேறு காலங்களில் ஆத் தர்மி இயக்கம் (பட்டியல் சாதியினர் ), சிங் சபா இயக்கம்( சீக்கியர்கள்), ஆர்யா சமாஜ் (இந்து சமயம்) , அகமதியா இயக்கம், கிருத்துவர்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மதஅடிப்படையிலான சீர்திருத்தங்களை கொண்டு வந்தன. இந்த இயக்கங்கள் தங்களது வழிபாட்டு கோட்பாடுகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்ததன் காரணமாக, பஞ்சாபில் மதமாற்றம் அதிகளவில் வரவேற்கப்பட்டது. இதன் காரணமாக, தீண்டாமையில் இருந்து வெளியேறுவதற்கான அதிகப்படியான வாய்ப்பு தலித் மக்களுக்கு கிடைத்தது.
மூன்றாவதாக, மற்ற மாநிலங்களை விட பஞ்சாபில் தலித் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
நான்காவதாக, பஞ்சாப் மாநில மக்கள்தொகையில் பல்வேறு காலங்களில் பிராமணர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் உள்ளது. இதனால், மற்ற மாநிலங்களை விட வலுவான சாதிய அடிப்படையிலான சமூக அடுக்கமைப்பு அங்கு உருவாகவில்லை.
ஏன் அரசியலில் ஆதிக்கம் இல்லை? பஞ்சாபில் தலித் அரசியல் ஆதிக்கம் செலுத்தாமல் போனதிற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் ரீதியாக தலித் மக்கள் ஒருங்கிணைக்கப்படாமல் போனதற்கு மதம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக பேராசிரியர் சந்தோஷ் கே. சிங், 'Dalit Politics and Its Fragments in Punjab' என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கிறார்.
பஞ்சாபில் மசாபி சீக்கியர்கள், ஆதி சாமர்கள் என இரண்டி பெரிய தலித் அமைப்பினர் காணப்படுகின்றன. பொருளாதார ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட மசாபி தலித் சீக்கியர்கள் தங்களை சீக்கியர்களாகவே கருதுகின்றனர். இவர்கள் சீக்கியர்கள் அடையாளங்களை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. எனவே, இவர்கள் தலித் என்பதைத் தாண்டி, ஜாட் சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்தும் சிரோமணி அகாலி தளம் (Shiromani Akali Dal) கட்சிக்கு ஆதரவை அளித்து வருகின்றனர்.
மறுபுறம், தோபா பகுதியில் அதிகமாக வாழும் சாமர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்தப் பிரிவினர், ஜாட் சீக்கியர்களின் அடக்குமுறைக்கு கடுமையான எதிர்த்து வருகிறது. எனவே, இவர்கள் அகாலி தளம் கட்சியை நிராகரிக்கின்றன.
மஜா, மால்வா ஆகிய இரண்டு பகுதிகளை விட மிகவும் வளமை வாய்ந்த பகுதியாகவும், தலித் அரசியல் விழிப்புணர்வு கொண்ட பகுதியாகவும் தோபா காணப்படுகிறது. மேலும், இந்த பகுதியில் இருந்து எண்ணற்ற தலித் மக்கள் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், கனடாவிலும் குடிபெயர்ந்துள்ளனர். 1920களில் தொடங்கப்பட்ட ஆத்-தர்ம இயக்கத்தில் சாமர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் ஆதி திராவிட இயக்கம் போன்ற ஒரு தனித்துவமான மத அடையாளத்தைப் பெறுவதற்காக ஆத்-தர்ம இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் 13 ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்கத் துறவியான ரவிதாசரை அவர்களின் ஆன்மீக குருவாகவும், தனி சடங்கு மரபுகளுக்காக ஒரு புனித நூலாக ஆத் பார்காஷையும் கொண்டுள்ளது.
இவர்கள், தங்களை அம்பேத்கர்வாதிகளாக கருதினாலும்,அம்பேத்கரின் தலித் அரசியலை உள்ளூர் நிலமைக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றன. மேலும், சாதி ஒழிப்பு அரசியல் என்பதைத் தாண்டி ரவிதாசரின் ஆன்மீக பயணத்தில் தான் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.