முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், சம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அச்சம்பவம் நடந்த மறுநாளான 2017 ஏப்ரல் 29 ஆம் தேதி கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து 2017 ஜீலை 3 ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.


கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  கோடநாடு வழக்கில் தொடர்புடைய விபத்து மற்றும் தற்கொலை வழக்குகளிலும்  கூடுதல் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் தற்கொலை வழக்கில், மீண்டும் விசாரணை செய்ய சோலூர்மட்டம் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய 5 ஆண்டுகள் பணியாற்றிய தினேஷ்குமார், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முகாமாக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போது சிசிடிவி காட்சிகள் ஏன் பதிவாகவில்லை, கோடநாட்டில் 27 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அங்கு சிசிடிவி கேமராக்களே இல்லை என காவல் துறையினர் தெரிவித்தது ஏன் என்பது உள்ளிட்டவை விடை கிடைக்காத சந்தேகங்களாக இவ்வழக்கில் உள்ளன. இது குறித்து அறிந்திருந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது எதனால், தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.