உயிரை காப்பாற்ற, உயிரையே பணயம் வைத்து பணிக்கு செல்பவர்கள் தான் மீனவர்கள். இயற்கைச் சீற்றம், இலங்கை கடற்படைத் தாக்குதல் என பல்வேறு சிக்கல்களையும் மீறி உழைத்து வருகிறார்கள். உலக நாடே கொரோனாவால் சுருண்டு கிடக்கிறது. இதில் மீனவர்களும் துடுப்பு இல்லாத படகாய் கொரோனா அலையில், அல்லாடி வருகின்றனர். கொரோனா முதல் அலையில் கூட பெரும் இழப்பை சந்திக்காத மீனவர்கள் இரண்டாவது அலைக்கு கருவாடாய் காய்ந்துவிட்டனர்.

 



 

பல்வேறு பொருளாதார சிக்கல்களில் படகுகளை பழுது நீக்கம் செய்யமுடியாமல் தவிக்கின்றனர். அரசு அனுமதித்தும் வாழ்வாதாரம் இழந்துவாடும் மீனவ சமூகம் என்ன செய்யப் போகிறோம், என்று புலம்புகின்றனர். கொரோனா ஊரடங்கில் படகுகள் சரி செய்யமுடியாத காரணத்தால் மீன்பிடி தடை நீங்கினாலும் கடலுக்குச் செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர். 

 

மீனவர் பிரச்னை குறித்து கேட்க இராமேஸ்வரத்தை சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் ஜெசுராஜிடம் கேட்டபோது.....," கரையில் இருந்து  12 நாட்டிக்கல் மைல் வரை தான் நம்முடைய மீன்பிடி எல்லை. இதில் சிறு நாட்டுப் படகுகள் கரையில் இருந்து 3 நாட்டிக்கல் வரை மீன்பிடிப்பார்கள் என்பதால் அதற்கு அடுத்த படியாக தான் விசைப்படகுகள் மீன் பிடிக்க முடியும். ஆனால் கரையில் இருந்து 3வது நாட்டிக்கல் முதல் 7வது நாட்டிக்கல் வரை பாறைப்பகுதி அதிகமாக இருக்கும். அதனால் அங்கு அதிகமாக மீன் பிடிக்க முடியாது. 7வது நாட்டிக்கல் முதல் 12வது நாட்டிக்கல் வரை தான் விசைப்படகுகள் மீன்பிடிப்போம். அதற்கு பின் இலங்கையின் எல்கைவந்துவிடும்.

 



இதற்கு ஒரு நாள் டீசல் செலவு 250 லிட்டர் முதல் 600 லிட்டர் வரை செலவு ஏற்படும். டீசல் உள்ளிட்ட மற்ற செலவுகள் 25 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை ஏற்படும். ஒரு படகில் 4 முதல் 8பேர் வரை மீன்பிடிக்கச் செல்வோம். ஒரு விசைப் படகை நம்பி 25 குடும்பங்கள் வாழ்கின்றன. கிலோ 800 ரூபாய்க்கு வித்த இறால் 350 ரூபாய்க்கு தான் விலைபோகுது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வை எப்படி சமாளிப்பது என்று விழிபிதிங்கி நிற்குறோம். ஒவ்வொரு முறையும் கடலுக்குப் போகும் போது கடன் தான் வாங்கிட்டு போவோம். அதனால் நிறைய மீனோட திரும்புனாதான் நிம்மதி. ஒரு பழைய விசைப்படகோட விலை 10 லட்சம் முதல் 50 லட்சம் வரைக்கும் இருக்கும். கடனும் கப்பியும் வாங்கி படகுக்கு பணம் கட்டுறோம்.

 



 

 இப்படி இருக்கும் போது டீசலுக்கே இம்புட்டு காசயும் குடுத்துட்டா மீனவன் எங்க போறது. வாழ்வாதாரம் அழியும் நிலைக்கு தான் செல்லும். கல்விக் கடன் வாங்கி பிள்ளைகள படிக்க வைக்குறோம். வேலை கிடைக்காத சூழல்லதான் இருக்காங்க. கொரோனா பாதிப்பு கடுமையா இருக்கு. மீனவனுக்கு நிறைய பணம் கிடைக்கும் ஆனா அவன் கையில நிக்காது. ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் டீசல் மானியமா கொடுத்தாங்க. தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சில மீனவருக்கு போதுமான அளவு டீசல் மானியமாக உயர்த்தி கொடுக்கணும். அன்னிய செலாவணிய ஈட்டிக் கொடுக்குறதுல மீனவனுக்கும் பங்குண்டு. தற்போது மீனவனுக்கு கொரோனா சமயத்தில் அரசு கைகொடுத்து உதவனும். ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம். தற்போது கொரோனா சமயத்தில் அதுவும் முடியப்போகுது. ஆனா கொரோனா இப்பவரைக்கும் குறையல. அதே சமயம் மீனவ குடும்பங்கள் அனைவருக்கும் தடுப்பூசியும் போடப்படல. எனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக மீனவர்களுக்கு வரும் 1 ஆம் தேதி வரை கூடுதல் டைம் குடுக்கணும். கொரோனா சமயத்திலும் தமிழக முதல்வர் சிறப்பாக பணி செஞ்சுக்கிட்டு இருக்கார். பல்வேறு பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குகிறார் அதே சமயம் மீனவர்கள் நிலைய மேம்படுத்த வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.



 

மேலும்  தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ்...," மீன்பிடி தடைக்காலம் முடியுது. ஆனா ஊரடங்கு நேரத்துல எப்படி படகுகளை வேலை செய்வது. தற்போது மீன் பிடித்தாலும் மீன் வாங்கும் இடத்தில் எக்கசக்க கூட்டம் குவியும். மீனவன்ல இருந்து, லோடு மேன் வரைக்கும் எல்லாரும் பாதிக்கப்படுவான். எனவே மீனவரின் நிலை உணர்ந்து மீன்பிடி தடை காலத்த நீட்டிக்கணும். பெட்ரோல், டீசல் விலைய குறைக்கனும். அதே போல மீனவருக்கு வழங்கும் மானிய டீசல அதிகப்படுத்தி கொடுக்கணும். தற்போதுவரை 1800 லிட்டர் வரை மானியம் கிடைக்குது. ஆனால் அதிக செலவு ஏற்படுவதால் பத்தவில்லை. எனவே அதனை 3ஆயிரம் லிட்டர் டீசலா அரசு அதிகப்படுத்தனும்” என கேட்டுக் கொண்டார்.