ஆர்.பி.ஐ ஆளுநர் பதவி என்பது ஒன்றும் வாக்கு வங்கியை குறிவைப்பதோ, பேஸ்புக்கில் லைக் வாங்குவதோ அல்ல, மக்களுக்கு பணத்தின் மீது நம்பிக்கையை வர வைப்பதே என் பணி, எல்லா முடிவுகளையும் புகழ்வது என் வேலை அல்ல, மாறாக விமர்சனத்துக்கு ஆளாவதும் அதில் இருந்து கற்றுக் கொள்வதுமே என் நோக்கம்” என மோடி அரசுக்கு எதிராக ஒருவர் பேசினார். அவர் பெயர் ரகுராம் ராஜன். இந்தியாவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் Research and Analysis wing எனப்படும் ரா அமைப்பு அதிகாரியின் மகன். அப்பாவின் வேலை காரணமாக பள்ளிக்கல்வியை உலகத்தின் பல நாடுகளில் கற்றுக் கொண்ட குழந்தைதான் ரகுராம் ராஜன். ஒரு கட்டத்தில் போபாலில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு டெல்லி பொதுப் பள்ளி, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் என காலம் ஓடியது. பொருளாதாரம் குறித்த பார்வை ராஜனுக்கு அதிகம். அதனால் அது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
1991-ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியாக பணியை தொடங்கினார் ராஜன். அவரின் கற்பித்தல் திறனையும் நிதி தொடர்பான அறிவையும் பார்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முழுநேர பேராசிரியாக நியமனம் செய்தது. அப்போதே ஸ்டாக்ஹாம் பல்கலைகழகத்திலும் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார். அவரது பொருளாதாரம் சார்ந்த பார்வைகள் பல்வேறு உலக நாட்டு அறிஞர்களை ஈர்த்தது, இந்தியா உட்பட. அப்போதுதான் சர்வதேச நிதி நிலையம் என அழைக்கப்படும் ஐ.எம்.எப். ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தது. அதன் கொள்கைகளை பலரும் விமர்சிக்க தொடங்கியிருந்தார்கள். என்ன செய்வதென்றே யாருக்கும் தெரியவில்லை. யாரையாவது இழுத்து வந்து சரிசெய்தே ஆகவேண்டும் என்ற நிலை. அப்போது ஐ.எம்.எப். துணை தலைவராக இருந்த ஆனி க்ரூகர் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அது ரகுராம் ராஜன் எழுதிய saving Capitalism from the Capitalists, அதாவது முதலாளிகளிடம் இருந்து முதலாளித்துவத்தை காப்பது எப்படி? என்பதே அந்த புத்தக்கம்.
அதில் ராஜன் சொன்ன கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ஆனி, அவரை சந்திக்க எண்ணினார். ஐ,எம்.எப். சந்தித்து வரும் சிக்கலை கூறினார். ஆனால் தனக்கு உலகத்தின் நிதி மேலாண்மையை கவனிக்கும், இத்தனை பெரிய அமைப்பின் சிக்கலுக்கு வழி ஏற்படுத்த முடியுமா என தெரியவில்லை என்றார் ராஜன். அதெல்லாம் முடியும் என்று ரகுராம் ராஜனை ஐ.எம்.எப். அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணராக நியமித்தார்கள். மிக இளம் வயதில் அந்த பதவியை அடைந்தவர் ராஜன் மட்டுமே. 2003 முதல் 2006 வரை அந்த பதவியில் இருந்த ராஜன் செய்தவை எல்லாம் அசாத்தியமானவை. ஐ.எம்.எப். வைத்திருந்த கொள்கைகளை எல்லாம் விமர்சனத்துக்கு ஆளாக்கினார், எப்போதும் குறுகிய கால டார்க்கெட் வையுங்கள் என்றார். சீனா , இந்தியா போன்ற 100 கோடி மக்களை கொண்ட நாடுகளின் பொருளாதார தன்மையை ஆய்வு செய்யுங்கள் என்றார். அதற்கான முழு வடிவத்தையும் கொடுத்தார். அமைப்பு முழுக்க ராஜனுக்கு ஆதராவாக நின்றது. மீட்டார் ராஜன். விமர்சனத்துக்கு ஆளான ஐ.எம்.எஃப். பாராட்டை பெற்றது.
ஒரு இந்தியரை உலகமே பயன்படுத்தும்போது நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என எண்ணினார் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். ஒரே கால், இந்தியா திரும்பினார் ரகுராம் ராஜன். திட்டக்குழு துணைத்தலைவரானர், பொருளாதார ஆலோசகரனார். கடைசியில் ஆர்பிஐ ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார் ரகுராம் ராஜன். பலருக்கும் அவரது நியமனம் நம்பிக்கையை கொடுத்தது. ஏனெனில் ராஜனின் பார்வை எப்போது நடுத்தர மக்களை உயர்வடைய செய்யும் கொள்கைகளாக இருக்கும் என்ற நம்பிக்கையே அதற்கான காரணம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி அரசு 2014-ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தது. அப்போது முதல் ராஜனுக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமானது. மேக் இன் இந்தியா திட்டத்தை மோடி அரசு அறிமுகம் செய்தபோது அதனை கடுமையாக எதிர்த்தார். சீனாவை பார்த்து இதனை காப்பி அடிக்காதீர்கள், அவர்கள் வேறு, நாம் வேறு, நாம் பெரிய சந்தை என்றாலும் பொருள்களை உருவாக்கும் Manufacturing துறையில் மட்டுமே கவனம் செலுத்துவது தேவையற்றா சிக்கலைத்தான் உருவாக்கும் என எச்சரித்தார்.
அதே போல், நாடு முழுக்க சகிப்புத் தன்மை குறைந்து விட்டது என்ற சர்ச்சை வெடித்த போது அதற்கு தன் தரப்பில் எண்ணெய் ஊற்றினார் ரகுராம் ராஜன். இந்தியா போன்ற நாடுக்கு சகிப்புத்தன்மை முக்கியம், சகிப்பில்லா நாடு பொருளாதாரத்தை பாதிக்கும் என வெளிப்படையாக சொன்னார் ராஜன். இதற்கு ஆளும் மோடி அரசில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்படி சென்று கொண்டிருக்கும் போது அதிக கடன் வாங்கும் பெரும் முதலாளிகளுக்கு கடன் விகிதத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசு சொன்ன போது வெடித்துச் சிதறினார் ராஜன். இது ஏழைகளை வயிற்றில் அடிக்கவும் நடுத்தர மக்களை தெருவில் நிறுத்தவும் செய்யும் என்றார். மோடி அரசின் பல நிதி சார்ந்த கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்தார். பெரும்பாலான திட்டங்கள் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவு என நேரடியாக விமர்சித்தார்.
கடைசியாக ராஜனின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இப்போது வரை ராஜன் ராஜினாமா செய்தாரா இல்லை அவரது பதவி முடிவுக்கு வந்ததா என்ற பேச்சுகள் அடங்கிய பாடில்லை. ஆனால் பதவிக் காலத்திலும் அதற்கு பின்னும் ராஜன் பேச்சுகளும் அவரது ஆலோசனைகளும் அனல் கக்குபவை. ராஜனை மீண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிப்பார்களா என பலரும் எதிர்பார்த்தபோது “பங்குச்சந்தை சரிவுக்கு ராஜன்தான் காரணம், அவருக்கு ஒன்றும் தெரியாது” என விமர்சித்தார் உலகம் அறிந்த பொருளாதார மேதை என தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சுப்ரமணியன் சுவாமி.
ஜெயலலிதாவின் சாய்ஸ்.. முதல்வர் ஸ்டாலின் அணி.. எஸ்தர் டஃப்லோ கதை..!
ஆனால், மீண்டும் சிகாகோ , பேராசிரியர் பதவி என கிளம்பினார் ராஜன். பொருளாதாரம் சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட ராஜன், மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை மோசமான யோசனை என்றார். மிக வேகமாக வளர்ந்து வந்த இந்தியாவின் பொருளாதாரத்தை வெற்றிகரமான இரண்டு முடிவுகளால் மோடி நிறுத்தினார் என விமர்சித்தார். அதன் பின் பெரிதாக எங்கும் வராத ராஜனைத்தான் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தனது அணியில் சேர்த்துள்ளார். தவ்ளூண்டு ஆங்கராக தமிழ்நாடு எனும் கப்பலை தாங்குவார் ராஜன் என நம்பியிருக்கிறார் ஸ்டாலின்.