16-வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கி உள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிப்பில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தமிழத்தில் உள்ள நிதி நிலையை சீர் செய்யவும் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பொருளாதார ஆலோசனை குழுவில் உலக அளவில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்களான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஜீன் ட்ரீஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் இருப்பார்கள் என ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


எஸ்தர் டஃப்லோ


பிரான்சை பூர்விகமாக கொண்ட எஸ்தர் டஃப்லோ, மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு துறையின் பொருளாதார பேராசிரியராக உள்ளார். 2003ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அப்தூல் லத்தீல் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வு நிறுவனத்தின் இணை இயக்குநராகவும் எஸ்தர் டஃப்லோ உள்ளார். உலக அளவில் வறுமை ஒழிப்புக்கான ஆய்வுகளை மேற்கொண்டதால் கடந்த 2019-ஆம் ஆண்டு எஸ்தர் டஃப்லோவிற்கும் அவரது கணவரும், அமெரிக்கா வாழ் இந்தியருமான அபிஜித் பானர்ஜி மற்றும் மெக்கேல் கிராம் ஆகியோருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை அபிஜித் பானர்ஜி விமர்சித்து வருவதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில் அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.


ரகுராம் ராஜன்


ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக அனைவராலும் அறியப்பட்ட ரகுராம் ராஜனின் பெற்றோர்களின் பூர்வீகம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்த ரகுராம் ராஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டவர். 2013-ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் 23-வது ஆளுநராக நியமினம் செய்யப்பட்டார் ரகுராம்ராஜன். இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் தற்போது பொருளாதார  மந்த நிலைக்கும் அதன் சரிவுக்கும் காரணம் என ரகுராம் ராஜன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது


அரவிந்த் சுப்பிரமணியம்


மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். தனது இளங்கலை பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்திலும் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பிலும் முடித்தவர் ஆவார். 2014-ஆம் ஆண்டில் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட அரவிந்த் சுப்பிரமணியன் 2018-ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின் போது இந்திய பொருளாதாரம் ஐசியுவில் இருப்பதாக விமர்சித்திருந்தவர் அரவிந்த் சுப்பிரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜீன் ட்ரெஸ்


ராஞ்சி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அமைப்பில் பேராசிரியராக ஜீன் ட்ரெஸ், பெல்ஜியத்தை பூர்வீகமாக கொண்டவர். பாலின சமத்துவமின்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பல்வேறு ஆய்வுகளை ஜீன் ட்ரெஸ் மேற்கொண்டு வருகிறார். சந்தை விலைகள் சிதைக்கப்படுபோது செய்யப்பட வேண்டிய கொள்கை சீர்திருத்தங்கள் குறித்து நோபல் பரிசு வென்ற  பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென் எழுதிய நூலுக்கு இணை ஆசிரியாராகவும் இவர் இருந்துள்ளார்


எஸ் நாராயண்


1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவின் ஐ.ஏ.எஸ் ஆக தேர்வான எஸ்.நாராயன், மத்திய அரசின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறைக்கான செயலாளாக இருந்து ஓய்வு பெற்றவார் ஆவார். முன்னதாக வருவாய், பெட்ரோலியம், தொழில்துறை மேம்பாடு மற்றும் நிலக்கரி துறைகளின் செயலாளராகவும் நாராயண் இருந்தார். கடந்த 2003-ஆம் ஆண்டில் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழுவிலும் நாராயண் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை 50 ஆண்டு காலமாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் குறித்தும் திராவிட கட்சிகள் குறித்தும் இவர் எழுதிய ’’திரவிடியன் இயர்ஸ்’ என்ற புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது