ரகுராம் ராஜன் முதல் எஸ்தர் டஃப்லோ வரை அனைவரும் பொருளாதார புலிகள். பல இடங்களில் மிகச் சரியாக பயன்படுத்தப்படாதவர்கள். தமிழ்நாடு முதலமைச்சரின் சாய்ஸ் அனைத்துமே திறமைசாலிகளாக இருந்தும் சரியாக பயன்படுத்தப்படாதவர்களை நோக்கி திரும்பியிருக்கிறது. அப்படி தமிழ்நாடு சரியாக பயன்படுத்த நினைத்து ஆனால் ஒரு கட்டத்தில் பயன்படுத்தப்படாமல் போனவர் எஸ்தர் டஃப்லோ. 


நமக்கு நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியை தெரிந்திருக்கும். அவரோடு இணைந்து நோபல் பரிசு வென்றவர்தான் எஸ்தர் டஃப்லோவும். அபிஜித்தின் மனைவி. எஸ்தருக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா , கடந்த 2002ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போதே எஸ்தரை அடையாளம் கண்டு பயன்படுத்தினார். தமிழ்நாட்டுக்கு தேவையான அடிப்படை விஷயம் நீர்மேலாண்மை, அதனை செய்யாமல் வேறு எந்த விஷயம் செய்தாலும் வீண் என்றார் எஸ்தர். அதற்கான முழுமையான திட்டங்களை 2004-ஆம் ஆண்டு கொடுத்தார். அதோடு 145 கிராமங்களில் ஆய்வு நடத்திய எஸ்தர், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் மட்டுமே நீர் மேலாண்மையை உருவாக்க முடியும் என்றார். இது ஒருபுறம் இருக்க, 2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் எஸ்தரை அழைத்தார். 




மக்கள் நல்வாழ்வு திட்டங்களை உரிய பயனளிக்கும் வகையில் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும்? எந்தெந்த துறைகளில் அதற்கான கவனமும் கொள்கையும் தேவை என கேட்டார். அபிஜித்தும் எஸ்தரும் இணைந்து நடத்திய ஜெ-பால் அமைப்போடு ஒப்பந்தம் போட்டார்  எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதில் கொள்கை உருவாக்க வேண்டும், எதை செய்தால் முடிவுகள் சரியாக இருக்கும் என பல விஷயங்களை உருவாக்கவும் அதனை முடிவுகள் அடிப்படையில் அணுகவும் வேண்டும் என முழுமையான திட்டங்களை உருவாக்கி கொடுத்தார் எஸ்தர்.


சுகாதாரம்,  கல்வி, வீட்டுவசதி, நகரமயமாக்கல், சமூக நலம், வணிக வரி உள்ளிட்ட 7 துறைகளை தேர்வு செய்தார் எஸ்தர். ஒவ்வொன்றிலும் ஏற்கெனவே நடப்பதை முறையான ஆய்வுக்கு உட்படுத்தினார். எதில் ஊழல் நடக்க வாய்ப்பு, ஏன் திட்டங்கள் முறையாக செய்யப்படவில்லை என கண்டறிந்தார். பல்வேறு திட்டங்களை வகுத்தார். அறிக்கை கொடுத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் முதல்வரான ஓ.பி.எஸ்ஸும் இவர்களோடு ஒப்பந்தம் போட்டார்.


அப்போதைய நிதித்துறை செயலராக இருந்த கிருஷ்ணன் ஐஏஎஸ் கூறும்போது “உலகின் மிகச்சிறந்த பொருளாதார அறிஞர்களோடு தமிழ்நாடு கை கோத்துள்ளது, வெற்று வார்த்தைகளால் திட்டங்களை வகுக்காமல் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதில் வரும் முடிவுகள் மூலம் கொள்கைகளை வகுக்கும் இவர்களால் தமிழ்நாடு மிக்கபெரும் பயனடையும்” என்றார். 




முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லும் ஐந்து பேர் யார்?


ஆனால் அதன்பின் அதிமுகவில் நடந்த பல்வேறு மாற்றங்கள் எஸ்தரை பயன்படுத்திககொள்ள அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் முடிந்ததால் அவரும் மேற்கொண்டு ஏதும் செய்யவில்லை. இந்நிலையில்தான் முதலமைச்சர் முக ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இணைந்துள்ளார் எஸ்தர். தமிழ்நாட்டில் எஸ்தர் செல்லாத கிராமங்கள் இல்லை எனலாம். மக்களிடம் பொருளாதாரம், வாழ்க்கைத்தரம், தமிழ்நாட்டில் உள்ள கொள்கைகள், பொருளாதாரம் சார்ந்த பார்வை என அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர் அவர். எஸ்தரின் வரவு கண்டிப்பாக மாற்று வருவாய் தேடும், பொருளாதார மூலங்களை உருவாக்க முயலும் தமிழ்நாட்டுக்கு நிச்சயம் பலனளிக்கும் என்றே தோன்றுகிறது.