புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சிஐஎஸ்எப் மற்றும் போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட போது, சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் உடலில் வேறு ஏதும் குண்டுகள் உள்ளதா என சிடி ஸ்கேன் பரிசோதனை மற்றும் இரண்டு மணி நேரம் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழக காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி போது வெளியான துப்பாக்கி குண்டு ஒன்று இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாட்டி வீட்டுக்கு வந்த கொத்தமங்கலப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் புகழேந்தி (11) தலையில் பாய்ந்தது. பலத்த காயமடைந்த சிறுவனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, தலையில் குண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்ப்பட்டனர். பின்னர் நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் மூளைப்பகுதியில் இருந்த குண்டு அகற்றப்பட்டது.
ஆனாலும் சிறுவனின் உடல் மிகவும் மோசமாகவும், கவலைக்கிடமாக இருந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் சிறுவன் இறந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். புகழேந்தி இறந்ததையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். இதற்கிடையில் அரசு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இத்தொடர்ந்து காலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் டிஎஸ்பி கபிலன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். பிணவறையில் இருந்து சிறுவனின் உடல் அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உடலில் குண்டுகள் ஏதும் உள்ளதா என சிடி ஸ்கேன் செய்தனர். பின்னர் காலை 11.25 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெறும் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 1.40 மணிக்கு சிறுவனின் உடல் வெளியே கொண்டு வரப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்போடு சிறுவனின் உடல் ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் தஞ்சை மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் பரபரப்பாக காணப்பட்டது.
சிறுவனை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தவரை பெற்றோருக்கு தேவையான உதவிகளையும், சிறுவனின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச்சை தொடர்பானவற்றை கேட்டு அரசுக்கு தெரியப்படுத்தி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை கூறுகையில், பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சியின் போது, அங்கு ஏற்கெனவே ஊரப்பட்டியைச் சேர்ந்த சின்னாத்தா என்ற பெண்ணுக்கு காலில் குண்டு அடிபட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு சித்துப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு தோளில் குண்டு பாய்ந்த காயத்தோடு தப்பினார். எனவே துப்பாக்கி சுடும் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும். சிறுவனின் தலையில் எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் போலீஸாரிடம் வழங்க கூடாது, அதனை நீதிமன்றத்தில் தான் ஒப்படைக்க வேண்டும். சிறுவனின் தாய்க்கு வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் வேலையும், அரசு சார்பில் வீடும் கட்டித் தர வேண்டும் என்றார்.