சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 500 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. தமிழக  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தஞ்சாவூரில் கடந்த 30 ஆம் தேதி அருளானந்த நகரில் உள்ள அருணபாஸ்கர் என்பவரிடம் போலீஸார் விசாரித்தபோது, அவரது தகவலின்படி சென்னையில் உள்ள தனது தந்தை சாமியப்பன் வங்கி லாக்கரில் 500 கோடிக்கும் மேலான மதிப்புள்ள மரகதலிங்கம் சிலை இருந்ததாக கூறப்பட்டதை அடுத்து அந்த மரகதலிங்கம் சிலை கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட மரகதலிங்கம் சிலையை,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பொன்னி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோரது தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.




அப்போது நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் சிலையின் உயரம், எடை ஆகியவை அளவிடப்பட்டது. பின்னர், 8 செ.மீ உயரத்தில், 530 கிராம் எடை கொண்டது என தெரிவித்தனர். மேலும் சிலையின் தொன்மை குறித்து போலீஸார்,  நீதிபதியிடம் விளக்கமளித்தனர். பின்னர்  சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். பின்னர் நீதிபதி சண்முகப்பிரியா மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேரில் நாகேஸ்வரன் கோயிலுக்கு சென்று அங்கு மரகதலிங்கம் சிலையை வைக்கும் இடத்தை பார்வையிட்டனர். மீட்கப்பட்ட மரகத லிங்கம் 500 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சிலை என்பதால் நீதிபதியே சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




பின்னர் நிருபர்களிடம் காவல் கண்காணிப்பாளர் பொன்னி கூறுகையில், கைப்பற்றப்பட்ட மரகதலிங்கம் 500 கோடிக்கும் மேல் மதிப்புள்ளது. திருக்குவளை தியாகராஜர் சுவாமி கோயிலில் காணாமல் போன மரகதலிங்கம் சிலை தொடர்பாக சில ஆவணங்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் முதற் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த  விசாரணையை துரிதப்படுத்த ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். தற்போது பிடிபட்டவரிடம் விசாரணை நடந்து வருகின்றது. இவர்களிடம் வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா எனவும் விசாரித்து வருகின்றோம். பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் என்பதால், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டோம். அதன்படி இங்கு கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 24 மணி நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் - நீதிபதிகள்