தமிழகத்தின் 16வது சட்டமன்றத்தில் முதலாவது பேரவைக் கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நேற்று தொடங்கப்பட்டது. இந்த உரையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட், உழவர் சந்தைகள் மீண்டும் செயல்படுத்தப்படும், நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.


மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார நிபுணர் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவில் ரிசர்வ் வங்கியில் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லா, அரவிந்த் சுப்ரமணியன் , ஜூன் ட்ரெஸ் மற்றும் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிபுணர்கள் குழுவிற்கு ரகுராம் ராஜன் தலைமை வகிக்க உள்ளார்.






 


தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவர்களின் பரிந்துரைகள் மாநில வளர்ச்சிக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் பொருளாதார நிபணர்கள் குழு பற்றி  தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் சமூக நீதி எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதையடுத்து, அவரது கேள்விக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் வானதி சீனிவாசனுக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். மேலும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.