கடந்த இரண்டு நாள்களாக அணில்கள் தமிழ்நாட்டின் பேசுபொருளாக மாறியுள்ளன. காரணம் தமிழ்நாடு முழுக்க அடிக்கடி ஏற்படும் மின் தடை. 2 நாள்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் நெருங்கியதை மனதில் கொண்டு, டிசம்பர் மாதத்துக்கு பிறகு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் விட்டு விட்டனர். சில இடங்களில் மரங்கள் இருக்கும், செடிகள் வளர்ந்திருக்கும், இதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டும். இதனால் உரிய இடங்களை கண்டறிந்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். சில இடங்களில் மரங்கள் வளர்ந்து அதன் மூலம் அணில்கள் கம்பியில் ஓடுகின்றன, அவ்வாறு ஓடும் போது இரண்டு கம்பிகள் ஒன்றாகி அதனால் மின்சாரம் தடை படுகிறது” என்றார்.
மேலும் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக மக்கள் புகார் தெரிவிக்கலாம், இரவு நேரங்களிலும் கூட மக்களின் குறைகளை கேட்டு அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்” எனவும் செந்தில் பாலாஜி கூறினார். அமைச்சர் பேசி முடித்ததில் இருந்து அணில்தான் காரணம், அமைச்சர் இல்லை என அவரை கலாய்க்க தொடங்கினர் இணையதள வாசிகள். அதோடு அதிமுகவினரும் இதுதான் சரியான சான்ஸ் என மீம்ஸ்கள் பறக்க விட்டு வருகின்றனர்.
அமைச்சரின் பேச்சும் அணில்கள் பற்றிய கூற்றும் உண்மையா, அதற்கு வாய்ப்புள்ளதா என ஆராய்ந்தோம். உலகில் மின் தடை ஏற்படுத்தும் மிக அழகான உயிரினம் அணில் என ஆராய்ச்சியாளர்கள் வர்ணித்திருந்தனர். அணில்களை பொருத்தவரை மின் ஒயர்களை பற்களால் கடித்து மின்சாரத் தடையை உண்டாக்க முடியும். அணில்களின் பற்கள் வாழ்நாள் முழுக்க வளரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதே போல் இரண்டு மின் கடத்திகளாக செயல்படும் மின்சார கம்பிகளை பாலமாக பிடித்துக் கொள்ள அணில் முயலும் போது மின் தடை ஏற்படலாம். இதனால் அணில்கள் இறக்கவும் செய்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது இரண்டாம் வகை மின் தடை. மின்சாரக் கம்பிகள் மேல் ஊர்ந்து செல்லும் அணில்கள் மற்றொரு கம்பியை தாவுவதற்காக பயன்படுத்த நினைத்து அந்த கம்பியை பிடிக்கும். அப்போது இரண்டு கால்களில் இரு கம்பியையும் அடுத்த இரண்டு கால்களில் மற்றொரு கம்பியையும் பிடிக்கும். அப்படி பிடிக்கும் போது இரண்டு கம்பியும் வெவ்வேறு மின்னோட்டம் கொண்டதாக இருந்தால் கண்டிப்பாக மின் தடைக்கு வாய்ப்புண்டு. ஆனால் இது உடனே சரி செய்யக் கூடியதாகத்தான் இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அணில்கள் மூலம் மின் தடை ஏற்படும் நிகழ்வு உலகம் முழுக்கவே நடைபெறுகிறது. கடந்த 2018ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் 2 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபட்டது. சுமார் 45 ஆயிரம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர் என அப்போது செய்தி வெளியாகி இருந்தது. இதே போல் நியூ ஜெர்சி நகரத்திலும் இரண்டு கம்பிகளுக்கு இடையே பயணிக்க முயன்ற அணிலால் மின் தடை ஏற்பட்டது. காலை 9 மணிக்கு ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய 12 மணி ஆனது. அமெரிக்காவில் நடக்கும் மின் தடையில் 20% மின் தடைக்கு அணில்கள் காரணம் என அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் அணில்களால் ஏற்படும் அதிகப்படியான மின் தடை சம்பவங்கள் வனப்பகுதிகளில் ஏற்படுகின்றன. ஏனெனில் அங்கு அதிகப்படியான அணில்கள் வாழ்கின்றன. அதே நேரத்தில் அணில்கள் இருக்கும் பகுதிகளில் மின் தடைக்கு கண்டிப்பாக அவை காரணமாகின்றன. மின்சேவை நிறுவனங்கள் இதனை மனதில் கொண்டே மின்கம்பிகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கான வழிமுறைகளையும் கையாளுகின்றன. குறிப்பாக Insulation எனப்படும் பிளாஸ்டிக் பாதுகாப்பை அதிகப்படுத்துகின்றன. மின்கம்பி செல்லும் பாதையில் எந்த மரமோ செடிகளோ தொடர்பு கொள்ளா வகையில் பராமரிப்பு செய்கின்றனர். கேட்பதற்கு இதெல்லாம் நடக்குமா என தோன்றினாலும் இதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதே உண்மை. அதே நேரத்தில் அணில்களால் எத்தனை மின் தடை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன என்ற சரியான தகவல்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இல்லை. ஆனால் காரணத்தை வாரியம் உறுதி செய்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போதும் சில இடங்களில் ஏற்படும் மின் தடைக்கு அணில்களின் இத்தகைய செயல்கள் காரணம் என்றார். ஒட்டுமொத்த மின் தடைக்கும் அணில்களே காரணம் என சொல்லவில்லை. அதனால் அணில்களிடம் உஷாராக இருங்கள். அவை அழகும் ஆபத்தும் நிறைந்தவை.