தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே மான் கொம்பு, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் இன்று போப் கல்லூரி முன்பு வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீஸார் வழிமறித்து, அதில் வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் சிவத்தையாபுரம் சாமிக்கோயில் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஆனந்தசேகர் என்பது தெரியவந்நது. அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில், வரை சோதனை செய்ததில், அதில் 1 மான் கொம்பு, 1 கத்தி, மற்றும் 1 வீச்சு அரிவாள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீஸார் அவரைக் கைது செய்து, மான் கொம்பு மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அடிப்படையில் அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மேலும் 3 பெரிய வீச்சரிவாள், 1 அரிவாள், 3 பெரிய கத்தி, 3 மான் கொம்பு மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்துக் கம்பி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்ததும் எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் சாயர்புரம் காவல் நிலையம் சென்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக சாயர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தசேகருக்கு யார், யாருடன் தொடர்புள்ளது, அவர் எதற்காக சட்டவிரோதமாக இதுபோன்ற பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தார் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.