சென்னை கடற்பரப்பில் இருந்து தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கையில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு எண்ணெய் ஏற்றி சென்ற போர்த்துகீசிய நாட்டு கப்பலில் இருந்து பத்து கிலோ லிட்டர் எண்ணெய் கொட்டி உள்ளதாக இந்திய கடலோர காவல் படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. போர்ச்சிகீசிய நாட்டின் நிறுவனமான எம்.வி.டெவன் என்ற கப்பல் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் 382 கொள்கலன்களில் 10,795 டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹால்டியா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் பல்வேறு நாடுகளை சேர்ந்த 17 பேர் கொண்ட குழுவினாரால் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னையின் தென் கிழக்கு பகுதியில் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக கடந்த புதன் கிழமை தாமதமாக இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடல் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது
விசாரணையில் எம்.வி டெவன் கப்பலின் எரிபொருள் தொட்டியில் இடது பக்கத்தில் சல்பர் எரிபொருள் எண்ணெய் தொட்டியில் இடப்பக்கத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உடைப்பு கண்டறியப்படுவதற்கு முன்னாள் சுமார் 10 கிலோ லிட்டர் எண்ணெய் கடலில் கொட்டிவிட்டது. தொட்டியில் மீதமுள்ள எண்ணெய் கப்பலின் குழுவினரால் மற்றொரு தொட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. உடைந்த கொள்கலன் இன்றைய தினம் ஹால்டியாவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் நிலையாக உள்ளதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இதே போல கடந்த நவம்பர் 2018-ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகே உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அட்லாண்டிக் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததால் கடுமையான கடல்மாசு ஏற்பட்டது. கடல் நீரின் மேற்பரப்பில் படர்ந்த எண்ணெயை உடனடியாக அகற்ற முடியாததால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மூலம் வாளிகளை கொண்டு எண்ணெய்யை அள்ளும் முயற்சியை அரசு மேற்கொண்டது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.