83-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழ்நாடு முதல்வர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.  


இதுகுறித்து, பாமக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "ராமதாஸின் 83-வது பிறந்தநாளையொட்டி, இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், தில்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.


உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு ராமதாசுக்கு 83-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். 






தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட ராமதாஸ், “உங்கள் தந்தை கலைஞர் என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். ராமதாஸை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின்  நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்கவேண்டும்’’ என்று வாழ்த்தினார். அதற்காக, ராமதாஸுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.






பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்" இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.    


ராமதாஸ் வாழ்க்கை வரலாறு: 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்சிவிரி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சஞ்சீவராயக், தாயார் நவநீத அம்மாள் ஆவார். இவரது உடன் பிறந்தோர் நான்கு பேர். மருத்துவக் கல்வி கற்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற இவர், 1967 ஆம் ஆண்டில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கினார். 1980-ஆம் ஆண்டில் தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1990இல் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்னும் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது.


மேலும், வாசிக்க: 


’மாற்றம், முன்னேற்றம்’ பாமக தலைவராகுகிறார் அன்புமணி ராமதாஸ்..?


'மொத்தம் 80 இடங்கள்.. 10 பேர் தான் தமிழ்நாடு.. தாரைவார்க்கப்படும் பணியிடங்கள்' - ராமதாஸ் அறிக்கை