2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது ஆட்சியை பிடிக்க வேண்டும் அல்லது ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்ற ‘பலே’ திட்டத்துடன் பாமக இப்போதே களம் இறங்கியுள்ளது. அதற்கான முக்கியப்படியாக, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ், விரைவில் அந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக பாமக தலைவராக இருக்கும் ஜி.கே.மணி, பாமக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வரும் தலைவர் பொறுப்பு அன்புமணிக்கு மடைமாற்றம் செய்யப்படவுள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக இப்போதே பாமக வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற வாசகத்தை முன்வைத்து 234 தொகுதிகளில் பாமக தனித்து போட்டியிட்டதுபோலவே, அடுத்த சட்டமன்ற தேர்தலை பாமக தலைமையில் கூட்டணி அமைத்து, அன்புமணியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை கட்டமைக்கவும், இளைஞர்களை இழுக்கவும் இப்போதிலிருந்தே பாமக தயாராக முடிவு செய்துள்ளது. அதன் முக்கிய பகுதியாகதான் அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 33 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றும், பாமக ஆள்பவர்களின் கட்சியாக மாறுவது எப்போது என்றும் இராமதாசு கேள்வி எழுப்பி, நமது அடுத்த இலக்கு அதுவாகவே இருக்கட்டும் என்று தனது ட்விட்டர் மூலம் கடந்த 16ஆம் தேதி பதிவிட்டிருந்தார். இதற்கு தனது ட்விட்டர் மூலமே பதிலளித்த அன்புமணி, அய்யாவின் கனவை நனவாக்க, நான் உங்களை வழி நடத்துவேன் என்று கூறியிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு குறித்து பாமக வட்டாரங்களில் விசாரித்தபோதுதான், அன்புமணியை தலைவராக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இளைஞர்களை மையப்படுத்தி கட்சியை வலுவாக்க வேண்டுமென்றால் அதற்கு அன்புமணி-தான் சரியாக இருப்பார் என்றும், திமுக-வில் உதயநிதி, பாஜக-வில் அண்ணாமலை போன்றோருக்கு ஈடுக்கொடுத்து செயலாற்ற வேண்டுமென்றால் பாமக தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு தரவேண்டும் என்றும் தைலாப்புரம் தோட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஜி.கே.மணிக்கு கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் போன்ற பொறுப்பு கொடுக்கலாம் என்றும் பேசப்பட்டுள்ளது. அதேபோல், கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் உள்ள பொறுப்புகளை தரவும், கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகளை மாற்றவும் இராமதாசு திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, ஊடகங்களில் பாமக தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாக வைக்க பத்திரிகையாளர்களுடன் நெருங்கி பழக செய்தித் தொடர்பாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களை மேம்படுத்தி, அதன் மூலம் இளைஞர்களை ஈர்க்கவும் முடிவு செய்து அதற்கான பணிகளும் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கின்றன.
2016ல் தனித்து போட்ட பாமக, கடந்த 2021ஆம் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வென்றுள்ளது. அதேபோல், 20ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவோடு பாமக கூட்டணி அமைத்தது, அப்போது அந்த கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 20 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைத்தால் அது பாமக தலைமையில்தான், இருக்க வேண்டும் என்றும் அதற்கு கட்சியை தயார்படுத்தும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விரைவில் பாமக-வில் பல மாற்றங்களை எதிநோக்கலாம்..!