நவீன தொழில்நுட்பங்களுடன் ஆய்வு:


ஒரிசா பாலு என்று பலராலும் அறியப்படும் சிவஞானம் பாலசுப்ரமணி தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர். தமிழின் தொன்மையை உலக அளவில் கடல் வழியில் தேடியவர். 


திருச்சி உறையூரில் 1963 ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழர் வரலாற்றை, புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் ஆய்வு செய்தவர். சிவ பாலசுப்பிரமணி தமிழகத்தின் விழுப்புரம், புதுவை நெய்வேலி சென்னை போன்ற பல இடங்களில் பணியாற்றியவர்.


சுரங்கம் மற்றும் வெளி நாட்டு கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறையில் பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர்.


ஆர்.ஏ.ஆர். என்ற பன்னாட்டு நிறுவனத்தில் உயிரி மருந்தியல் (Biopharmacology)மற்றும் மாற்று எரிபொருள் துறையில் (Alternative Fuel Sector) இயக்குநராக பணிபுரிந்துவர். ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை  நடத்தியவர்.


ஒரிசாவில் கனிம வள கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின்  உதவியுடன் விமான மூலமான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று அந்த ஆய்வுகளை கள ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் குழுவில் பணி புரிந்தவர். 


தமிழ்ச் சங்க உறுப்பினர்:


தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வந்த பாலு,  ஒரிசா புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, பல பொறுப்புகளில் பணியாற்றி தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்தில் முக்கிய பங்காற்றினார்.


அவர்களை உலகில் உள்ள தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தவர், உலக தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆர்வம் காட்டயதில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர்.


தமிழ் கடலோடிகள்:


அதே போல் இனப் பெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகங்களாய் மாற்றப்பட்டதையும், ஆமைகள் தம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்ற ஆய்வு கருத்தையும் முன்வைத்தார். 


ஆமைகள் தொடர்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்தவர். அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிரூபித்ததில் கவனம் பெற்றார்.


கடலோடிகளை மீனவர்களை வெறும் பாய் மரத்தில், மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்த்த இவரது பார்வை அனைவராலும் பாராட்டப்பட்டது.


விழிப்புணர்வு செய்தவர்:


கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்கு பயிற்சி தந்து, தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டி, தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தி, முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்தவர்.


கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராய் பணியாற்றியவர். மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள் , மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல் சார் குழுமம் போன்ற அமைப்புகளில் உறுப்பினராக இருந்தவர். 


இச்சூழலில்,  சென்னையில் வசித்து வந்த இவர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை துவங்கி உலக மக்களுக்கு தமிழருடைய தீப கற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதுவரை 500 இடங்களுக்கு மேலாக சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார்.


குமரிக்கண்ட (இலெமுரியா) கடல் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று செய்மதி, நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து குமரிகண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்து அவையின் அடிப்படை உண்மைகள் என்ன என்று கடலில் கள ஆய்வுகள் மூலம் நிரூபித்து வந்தவர்.


இந்நிலையில் தான் சமீபகாலமாக வாய் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று (அக்டோபர் 6) குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். தற்போது அவரது மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க: கரூரில் அரசு நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி - அவதிக்குள்ளான கர்ப்பிணி தாய்மார்கள்


மேலும் படிக்க: கிராம சபை கூட்டத்தின் போது கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன்ஜாமீன்