கிராம சபைக் கூட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சியில்,  காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், விவசாய சங்கத்தினர். பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளையும், புகார்களையும் தெரிவித்தனர். அப்போது, பேசிய விவசாயி அம்மையப்பன் என்பவர், கிராம சபை கூட்டத்தை ஒரே இடத்தில் நடத்தாமல் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சுழற்சி முறையில் நடத்த வேண்டும். மேலும் ஊராட்சி செயலாளர்களை மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


விவசாயி தாக்கப்பட்டார்


அப்போது கூட்டத்தில் அமர்ந்து இருந்த ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து காலால் அம்மையப்பனை எட்டி உதைத்து தாக்கினார். ஊராட்சி செயலாளரையே மாற்ற சொல்கிறாயா என கேட்டு, அவர் தாக்கியதில் அம்மையப்பன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. பாதிக்கப்பட்ட அம்மையப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தலைமறைவான தங்கப் பாண்டியனை பிடிக்க, 5 தனிப்படைகளை அமைத்து காவல்துறை தேடுதல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.




இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் சேர்ந்த தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமன் கோரி மனு...,”ஸ்ரீ வில்லிபுத்தூர் யூனியன் பிள்ளையார்குளம் ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருவதாகவும், கடந்த அக்டோபர் 2ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது விவசாயி அம்மையப்பன் என்பவரை கை மற்றும் காலால் தாக்கியதற்காக  வன்னியம்பட்டி விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கிராம சபை கூட்டத்தின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு மிகவும் வருந்துவதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே இந்த வழக்கிலிருந்து தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.




 


 

 

 

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் கிராமசபை கூட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். அப்போது அரசுத்தரப்பில் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியை தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. பொது இடத்தில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் முன்பு கேள்வி கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சட்ட ஒழுங்கு பிரச்னை. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. மேலும் விவசாயி அம்மையப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊராட்சி செயலரான தங்கப்பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி. தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. எனவே தங்கப்பாண்டியனுக்கு முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. வாரத்தில் ஒருநாள் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.