CM Stalin : திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஆளுநருக்கு பதில்


சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  அப்போது இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ”திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்களாக போற்றி பாராட்டிக் கொண்டிருக்கிறோம். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து இருக்கிறது.  


ஆனால் இப்படி தலைநிமிர்ந்து இருக்கக் கூடிய மாநிலத்தின் வளர்ச்சி பற்றி, மாநிலத்திலேயே மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு மட்டும் புரியவில்லை. திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாததால் இதுபோன்று விமர்சனம் செய்து வருகிறார். இதனால் தினமும் மக்களை குழப்பம் வகையில் பேசி வருகிறார்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


”WHO பாராட்டியுள்ளது"


மேலும், ”தொழில்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் நான் அதிகம் பங்கேற்கிறேன். அதற்கு அடுத்து நான் அதிகம் பங்கேற்பது மருத்துவத்துறை. அந்த அளவிற்கு மாநிலத்தில் மருத்துவத்துறை வளர்ந்துள்ளது. இந்திய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் மூன்று மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு இருக்கிறது. இதனை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். 


மக்களை தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் 1.51 கோடி பயனாளர்களுக்கு முழுச் சேவையும், 3 கோடி பயனாளர்களுக்கு தொடர் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிற்கே முன்னாடியாக விளங்கும் இந்த திட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பே (WHO) பாராட்டியுள்ளது. இந்த திட்டம் பற்றி உலக சுகாதார அமைப்பு தனது சமூக வளைத்தில் பாராட்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை தயவு செய்து குறைகளை சொல்லும் ஒருவர் படித்து பார்க்க வேண்டும். உலக அமைப்பே பாராட்டும் அளவுக்கு இந்த திட்டம் வளர்ந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஜூன் 15ல் கிண்டி மருத்துவமனை திறப்பு


இதனை தொடர்ந்து பேசிய அவர், ”ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்றிருந்தேன். ஆனால் அதனை கூட எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்துள்ளார். மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கட்டப்பட்டுள்ள சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 15ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 


முன்னதாக, நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக இன்று பதிலளித்துள்ளார். 




மேலும் படிக்க 


Chennai Metro : சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அதிரடி ஆஃபர்... நாளை முதல் கட்டண தள்ளுபடி...எதற்கு தெரியுமா?