மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை. 


மதுரை, புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  "உலக பிரசித்தி பெற்ற கோயிலாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருந்து வருகிறது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோயிலின் உள்ளே செல்போன் கேமரா மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ளே உள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


ஆனால், அருண் போட்டோகிராபி, ஸ்டாலின் போட்டோகிராபி, ஒன் கிளிப் போட்டோகிராபி, சீரா போட்டோகிராபி மற்றும் அருவி போட்டோகிராபி ஆகியோர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை எடுத்து தங்களின் Logo வைத்து பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி இவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு அனுமதி இல்லை என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனி நபர்கள் எடுக்காத வண்ணம் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் தரப்பில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் உள்ளே புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு அதன்படியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.


அமெரிக்கா போன்ற நாடுகளில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த புராதன சின்னம் எனக்கூறி படம் எடுத்து பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்கின்றனர் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த பழமைவாய்ந்த சின்னங்கள் புகைப்படங்கள் எடுத்து சமூக வளைத்தளங்களில் பதிவிட்டால் தான் அதன் அருமை வெளியே தெரிய வரும். இதனால் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்க முடியாது எனக் கூறி இரு தரப்பு பதில்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.