கோடை காலத்தில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கண்ணாடி இலை கேபிள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் போது துறை சார்ந்த அலுவலர்கள் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தாமல் பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,
கோடை காலத்தில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் அளிப்பதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் போதும், மின்வாரிய பணியாளர்கள் மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்யும்போதும், கண்ணாடி இலை கேபிள் அமைக்கும் பணி மேற்கொள்ளும் போதும் சாலையோரங்களில் மற்றும் பிற இடங்களில் குடிநீர் குழாய்கள் செல்லும் பாதைகள் உள்ளனவா என்பதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் உறுதி செய்து சேதப்படுத்தாமல் பிற பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியின் போது ஏற்படும் சேதங்களை அத்துறையினரே உடனடியாக சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணீஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அன்புமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லலிதா, தமிழ்நாடு அரசு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.