சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகத்தின் ஆட்டோ நகரம்


சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தமிழகத்தின் ஆட்டோ நகரம் என்ற சிறப்பு பெயருக்கு உரியது. லாரி சார்ந்த தொழில்கள் நிறைந்த இப்பகுதி சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்த இடமாகவே இருக்கும். இதனால் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 


ஆனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் எச்சரிக்கை பலகைகள் எதுவும் இல்லாததால் இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கனவே எழுப்பப்பட்டு இருந்தது. மேலும் லாரிகளும் நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு லாரிகள் நிறுத்துவதற்கான இடமும் அமைக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டது. 


6 பேரை பலி கொண்ட கார் விபத்து


இப்படியான நிலையில் சங்ககிரி அருகேயுள்ள சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் காரில் பயணித்த ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகளான பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.


இதில் இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இதனிடையே பிரியாவிற்கும் ராஜதுரைக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததால் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் பகுதியைச் சேர்ந்த பிரியாவின் பெற்றோரான பழனிச்சாமி, பாப்பாத்தி மற்றும் அவரது உறவினர்கள் எட்டு பேர் கொண்டலாம்பட்டி வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படாததால் தனது மகளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக கூறி இன்று அதிகாலை ஆம்னி வேனில் எட்டு பேரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சென்றனர்.


அப்பொழுது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள சின்னாக்கவுண்டனூர் என்னும் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியது  இதில் ஓட்டுனர் விக்னேஷ் மற்றும் அவர் அருகில் இருந்தவர்கள்  பலத்த காயமடைந்தனர். மேலும் ஆம்னி  வாகனத்தில் பயணம் செய்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி, பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை சஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.


மேலும் இந்த விபத்துக்குறித்து வழக்கு பதிவு செய்து  விபத்து ஏற்படுத்தி சென்ற லாரி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் விசாரணை மேற்கொண்டார். சங்ககிரி இன்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.




மேலும் படிக்க:  Crime: வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனம்; கொலையில் முடிந்த பகை - கடலூரில் பயங்கரம்