Teachers Day Celebration: சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் சார்பில் ஆசிரியர் தினவிழா ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்வி வளாகத்தில் நடைபெற்றது. 


எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் ஆசிரியர் தினவிழா:


எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான பாரிவேந்தர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். மேலும் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் சேர்மன் டாக்டர் சிவக்குமார், துணை சேர்மன் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாடல், நடனம், பட்டிமன்றம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய  நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் பேசுகையில், "ஒரு தற்செயல் அரசியல்வாதியாக நான் நாடாளுமன்றத்திற்கு சென்றபோது தான் எனக்கு தெரிந்தது. நான் ஒரு அரசியல்வாதியாக பார்க்கப்படவில்லை மாறாக ஒரு கல்வியாளராக பார்க்கப்படுகிறேன். குறிப்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் என்னை கடந்து செல்லும்போது பல்கலைக்கழகம் எவ்வாறு உள்ளது என்று தான் விசாரிப்பார்.  




அதேபோல் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் நமது பல்கலைக்கழகத்தில் படிக்க இடம்வேண்டும் என என்னிடம் தொடர்ச்சியாக கேட்பார்கள். அப்போது தான் இந்த பல்கலைக்கழகம் நாட்டு மக்களிடம் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது என்று உணர்ந்தேன். இந்த அளவிற்கான நற்பெயருக்கு நான் ஒருவன் மட்டும் காரணமல்ல. மாறாக இங்கு அமர்ந்துள்ள ஆசிரியர் பெருமக்களுக்கும் சமபங்கு உள்ளது. மேலும், ஒரு மூத்த ஆசிரியர் என்ற முறையில் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.


"சிறந்த கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்”


மேலும், ”நம் நிறுவனம் பெரிய நிறுவனம், பிரபலமானது என பெயர் எடுத்துள்ளதால் அமைதியாக இருந்து விடலாமா?  இந்த போட்டியுலகில் தற்போது 43% அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல பல கல்லூரிகளில் 60% இடங்கள் காலியாக உள்ளன. சில கல்லூரிகளில் மாணவர்களே சேரவில்லை என்ற நிலை உள்ளது. ஏனெனில் மாணவர்கள் பொறியியலை படிக்க ஏதோ ஒரு கல்லூரியில் சேர விரும்பவில்லை. அதற்கு மாறாக தரமான கல்வி நிலையத்தை தேர்ந்தெடுப்பதற்கே போட்டி போடுகின்றனர்.




எனவே, தொடர்ந்து நாம் கடுமையாக உழைக்க வேண்டும். சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும். சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும், தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்திலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், நம் மீதான மதிப்பை இழக்க மாட்டோம். எனவே அதற்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். அதற்கு நிர்வாகம் மட்டுமல்ல, ஆசிரியர்களும் சிறந்த படிப்பை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். 


மிஷன் சூரியன் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல் வீரர்களை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் மாணவர்கள் கேள்வி எழுப்புவதை ஊக்குவிக்க வேண்டும். ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். சிறந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மிக அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறான மாணவர்களின் ஆராய்ச்சிக்கு நிதி தேவைப்பட்டால் அதனை நமது கல்லூரி நிர்வாகம் வழங்கும். மேலும் பாட திட்டத்தை தாண்டியும் மாணவர்களின் திறன் வளர்க்க ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்” என்றார்.