அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதப்பரப்புரை எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவி தற்கொலை குறித்து பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவுமில்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பாக புகார்கள் இதுவரை பெறப்படவில்லை. முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மதம் சார்பான எந்த புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்துவ மாணவர்களை விட இந்து மாணவர்களே அதிகளவில் கல்வி பயில்கின்றனர். மதரீதியான பிரசாரங்கள் தலைமையாசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரியலூர் மாணவி பயின்ற பள்ளியில் 80 சதவீதம் மாணவிகள் இந்துக்களாக இருக்கும் நிலையில், மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியாக கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதை கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் எனக்கு கிடையாது. இந்த சமூகத்தில் உள்ளவர்கள் அனைவரும் மாணவியில் தற்கொலைக்கு கவலைப்பட வேண்டும். மாணவியின் தற்கொலைக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பான எடுக்கப்படும் நடவடிக்கைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மாணவியின் தற்கொலை தொடர்பான முழுமையான வீடியோக்கள் வெளியே வர வேண்டும். வீடியோவில் மதமாற்றம் என்று கூற்று இல்லை என்றால் அதற்கான முழு பொறுப்பை அண்ணாமலை ஏற்க வேண்டும். தமிழ்நாடு மக்களுக்கு பதில் கூற வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அந்தப் பள்ளியில் சுமார் 1000 பேர் படிக்கின்றனர். அதில் 80% பேர் இந்துக்கள். பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் நிறையே பேர் இந்துக்களாக இருக்கின்றனர். பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கூட இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதுபோன்ற சூழ்நிலையில் மதமாற்றம் என்று கூறினால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்