தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவி காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021ஆம் வருடம் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.


இதைத் தொடர்ந்து தற்போது 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரும் 28-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்குகின்றன. இந்நிலையில் வரும் 29-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


முக்கியமான தேர்தல் தேதிகள்:


வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்-  28- 01-2022


 வேட்புமனு தாக்கல் இறுதி நாள் - 4-02-2022


 வேட்பு மனுக்கள் பரிசீலனை - 05-02-2022


வேட்பு மனு திரும்ப பெருவதற்கான கடைசி தேதி - 07 -02-2022


வாக்கு பதிவு நடைபெறும் தேதி - 19 - 02 -2022 


வாக்கு எண்ணிக்கை - 22-02-2022


வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டிய தொகையின் விவரம்:


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை:


பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி- 500 ரூபாய் 


நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி-1000 ரூபாய்


மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி-2000 ரூபாய்


இதர வகுப்புகளை சேர்ந்த நபர்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை :


பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி- 1000 ரூபாய் 


நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி-2000 ரூபாய்


மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி-4000 ரூபாய்


இந்த வைப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : நேரடித் தேர்தல் யாருக்கு? மறைமுகத் தேர்தல் யாருக்கு? வாக்காளர்களே தெரிஞ்சுக்கோங்க..!