தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் ஒரே கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, எனவும் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், அதனை தொடர்ந்து பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளும் போட்டியிடுவதை குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக மண்டல நிர்வாகிகளுடன் , பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துகளை விவாதிக்கபட்டது. பின்பு ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் தெரிவித்தது, தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடும் என்றார். மேலும் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் தேர்வு ஏற்கனவே நடை பெற்று விட்டதாகவும், முடிவுகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் ஒமிகிரான், கொரோனா பரவல் நேரத்தில் ஆளுங்கட்சி தேர்தலை நடத்துகிறது. இந்நிலையில் நோய் தொற்றின் பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சம் உண்டாகிறது. குறிப்பாக நோய் தொற்று காலத்தில் தேர்தலை நடத்துவது ஆளுங்கட்சியின் இயலாமை என்றார். தமிழகத்தில் 6 மாதம் கழித்து இப்போதுதான் தெரிகிறது திமுகவின் உண்மை முகம். அதற்கு பொங்கள் தொகுப்பு உதாரணமாக அமையும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்று இருந்தாலும் மீண்டும் மீண்டும் போட்டியிடுவோம். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். தோல்வி அடைந்தால் வீட்டில் படுத்து தூங்க முடியாது. கடைசி மூச்சு வரை போராடுவோம் என்றார்.
அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சரியானது. பேசிய வார்த்தைகள் தவறானது என்றார். அதிமுகவினர் தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள், அதை குழந்தையை கேட்டாலும் சொல்லும். அதைதான் நயினார் நாகேந்திரன் சொல்லியுள்ளார். ஆளுங்கட்சியின் முறையகேடுகளை மீறி தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம் என்று கூறினார். மேலும் அரியலூர் மாணவி விவகாரத்தில் மாணவியின் அடையாளங்களை பயன்படுத்தியது சட்டப்படி தவறு எனில் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக கவிஞர் வைரமுத்துவின் கவிதை "பட்டு வேட்டிகாக கனவு கண்டிருந்த போது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது" என்பது திமுகவின் ஆட்சிக்கு பொருந்தும். என்று கூறினார்.