NLC Fire Accident: நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் பல கோடி மதிப்பிலான இயந்திரத்தில் இன்று திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.


என்.எல்.சி சுரங்கம்:


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கிறது. தற்போது நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இரண்டாவது சுரங்கத்தை விரிவாக்கம் செய்து நிலக்கரி வெட்டி எடுக்க என்.எல்.சி முடிவு  செய்துள்ளது. முதற்கட்டமாக சுரங்கம் 2ல் இருந்து 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு  பரவனாறு அமைப்பது அவசியம் என என்.எல்.சி கருதியது. இதனால், கடந்த 26ஆம் தேதி என்.எல்.சி நிர்வாகம் ராட்சத பொக்லைன் எந்திரங்களை கொண்டு பயிர் செய்யப்பட்ட வயல்களில்  இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தொடங்கியது.


அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனமும் தெரிவித்தனர். இருப்பினும், முதலில் பகலில் மட்டுமே நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,  தற்போது இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த பணிகள் வேகமாக நடப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பயங்கர தீ விபத்து:


இந்நிலையில், நெய்வேலி என்எல்சி சுரங்கம் இரண்டில், MTC-என்ற நிலக்கரியை எடுத்துச் செல்லும் இயந்திரம், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட  நிலக்கரி கன்வேயர்  பெல்ட் மூலமாக மின் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இந்த கன்வேயர் பெல்ட்டில் மதியம் 12 மணக்கு தீ விபத்து ஏற்பட்டது. 2 கன்வேயர் பெல்ட்டுகள் உரசியதால் இந்த தீ வீபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த எந்திரத்துக்கு பரவியது. இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


ஆனாலும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில், கடந்த 9 நாட்களாக போராட்டத்தில் ஊழியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேலை தெரியாத புதிய ஆட்களை வைத்து பணி செய்வதால், இவ்விபத்து ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.  இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




மேலும் படிக்க 


தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் ராணுவ ஜெனரல் தொடர்பான ட்வீட் நீக்கம் தொடர்பாக ராணுவம் விளக்கம்