தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் ராணுவ ஜெனரல் தொடர்பான டிவீட்டை நீக்கியதற்கு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. 


தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். அவரை டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராணுவம்  (@NorthernComd_IA) வெளியிட்டிருந்த அறிவிப்பை Quote Tweet செய்து இருந்தார். மேஜர் பதவி உயர்வு குறித்து டிவிட்டரில் ராணுவம் வெளியிட்ட பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் வாழ்த்தி இருந்தார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட்


”பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்! என்று குறிப்பிட்டு கன்னியாகுமரியைச் சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா இந்திய ராணுவத்தின் மதிப்பிற்குரிய பொறுப்பை எட்டியது நம்பமுடியாத மைல்கல்.அவரது திறமைமிக்க சாதனைக்கு வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் முதலமைச்சர் குறிப்பிட்டு ரீடிவீட் செய்த டிவிட்டர் பதிவை இந்திய ராணுவம் நீக்கியது. ராணுவத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். திமுக எம்பி கனிமொழி டிவிட்டர் பதிவு மூலம் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். 


எம்.பி.கனிமொழி கேள்வி


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிட்ட டிவீட் நீக்கப்பட்டது குறித்து எம்.பி.கனிமொழி தனது ட்விட்டரில்,”தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


இந்த நிலையில் டிவிட்டர் பதிவு நீக்கம் குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அதில், முதல் பெண் ஜெனரலின் பதவி உயர்வு குறித்து ராணுவ அதிகாரிகள் தலைமையகம் அறிவிப்பதற்கு முன்னதாக, வடக்கு கமாண்ட் பதிவிட்டதால், அதை திருத்தும் விதமாக டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டதாக ராணுவத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.