Nellai Student Death: நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.


முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை: 


நெல்லை மாவட்டம் நாங்குநேரில் 12ஆம் வகுப்பு மாணவனும், அவருடைய தங்கையும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அலற வைத்துள்ளது.  இந்நிலையில், இதுகுறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, 


”நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.


அன்பில் மகேஷ் வேதனை:


இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம்.


குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்" என்றார். 


என்ன நடந்தது?


நாங்குநேரி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி அம்பிகா, ப்ளஸ் 2 படிக்கும் மகனும், 9-ஆம் வகுப்பு பயிலும் மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு  உதவி பெறும் பள்ளியில் அம்மாணவர்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள்.


பாதிக்கப்பட்ட மாணவர் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர். அதனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அந்த மாணவர்கள் அவரிடம் சாதிய ரீதியான அதிகாரங்களை காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் சில நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், பள்ளிக்கு சென்ற அம்மாணவர், ஆசிரியர்களிடம் நடந்ததை சொல்லவும், பிரச்சனைக்குரிய மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் அந்த மாணவர்களுக்கு விரோதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் இருந்த அம்மாணவரை ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தங்கை, தனது அண்ணன் தாக்கப்படுவதை தடுக்க முயற்சி செய்யும்போது, அவரது  கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்கள் இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்மாணவர் வெட்டப்பட்ட தகவல் கேள்விப்பட்ட அவரது தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.