Nellai: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவனும், அவருடைய தங்கையும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அலற வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


அன்பில் மகேஷ் உருக்கம்: 


இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், ”சமூகநீதிக்கான அரசு இது! பாதிக்கப்பட்ட தம்பியின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். மேலும், இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். 


அதில், ”நான் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.  மிகப் பெரிய ஆளுமைகள் எல்லாம் நமக்கு மிகப்பெரிய புத்திமதிகள் சொல்லி இருக்கிறார்கள்.  மனிதநேயம் என்றால் என்ன என்ற அடிப்படை விஷயத்தை பல்வேறு விதங்களில் வலியுறுத்தி இருக்கிறார்கள்.  திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பள்ளிக் கல்விக்காக முதல்வர் கொண்டு வந்துள்ள திட்டங்களால் இவ்வளவு பேர் பயன் பெறுகிறார்கள் என்பதை பெருமையாக பேசுகிறோம். நம்மை பார்த்து மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு பள்ளிக் கல்வியில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இப்படி இருக்கும் நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்வு நடத்திருக்கிறது. 


மிகவும் பாதிக்கிறது:


மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது புத்தியை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஆனால் ஒரு சில சம்பங்கள் எங்களை மிகவும் பாதிக்கப்பட வைக்கிறது. நாங்கள் அறிவு சார்ந்த மாணவர்களை முன்னேற்ற நினைக்கும்போது உங்களுக்குள் இருக்கும் வேற்றுமையால் ஏற்படும் சம்பவங்கள் எங்களை சோர்வடைய வைக்கிறது. 


மாணவர்களிடையே வேற்றுமையை உருவாக்க நினைக்கிறவர்கள் யாராக இருந்தாலும் ஒடுக்க வேண்டும் என நினைக்கும் அரசு இது. பாதிக்கப்பட்ட மாணவன், மாணவி இருவரையும் பாதுகாப்பான வகையில் நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பேன்.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இது என் கடமை. நான் எப்படி உங்களை தம்பியாக, தங்கையாக பார்க்கிறேனோ, மாணவர்களாக நீங்கள் எல்லோரும் சக மாணவர்களை சகோதரர்களாக பார்க்க வேண்டும்.


படிப்பில் கவனம் செலுத்துங்கள். ஒரு அமைச்சராக அல்ல, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் அண்ணனாக சொல்லுகிறேன். இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது. அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் உங்களுக்கு உள்ளது" என்றார்.


என்ன நடந்தது?


நாங்குநேரி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி அம்பிகா, ப்ளஸ் 2 படிக்கும் மகனும், 9-ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு  உதவி பெறும் பள்ளியில் பாதிக்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள்.


பாதிக்கப்பட்ட மாணவர் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர். அதனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அந்த மாணவர்கள் அவரிடம் சாதிய ரீதியான அதிகாரங்களை காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் சில நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், பள்ளிக்கு சென்ற அம்மாணவர், ஆசிரியர்களிடம் நடந்ததை சொல்லவும், பிரச்சனைக்குரிய மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அம்மாணவருடன் அந்த மாணவர்களுக்கு விரோதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் இருந்த மாணவரை ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தங்கை, தனது அண்ணன் தாக்கப்படுவதை தடுக்க முயல, அவரது  கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்கள் இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேரன் வெட்டப்பட்ட தகவல் கேள்விப்பட்ட அவரது தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.