கிருஷ்ணகிரி மாவட்டமானது வேகமாக வளர்ந்து வரும் தொழில் மண்டலமாக காணப்படுகிறது. ரயில் சேவைகளில் பெரிய அளவில் வசதிகள் இல்லாத மாவட்டங்களில் ஒன்றாக கிருஷ்ணகிரி இருந்து வருகிறது கிருஷ்ணகிரி. இங்கு ஓசூர், சாமல்பட்டி, தாசம்பட்டி, கெலமங்கலம், பெரியநாகதுணை ஆகிய 5 ரயில் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதில் ஓசூர், சாமல்பட்டி என இரண்டில் மட்டுமே ரயில் சேவை உள்ளது. குறிப்பாக ஓசூரில் தினசரி 26 ரயில்கள் கடந்து செல்கின்றன. சாமல்பட்டியில் 5 ரயில்கள் மட்டுமே கடக்கின்றன. இந்த நகராட்சியில் இருந்து அருகில் உள்ள ரயில் நிலையம் என்றால் கெலமங்கலம் தான் செல்ல வேண்டும்.எனவே இம்மாவட்ட மக்கள் ரயில் சேவை வேண்டுமெனில் குறைந்த 30, 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.
அப்படி சென்றாலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நேரடி ரயில் சேவையை பெற முடிவதில்லை. வேறு ரயில் நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து தான் ரயில் மாறி செல்ல வேண்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு விரிவான ரயில் சேவை வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கையை தயார் செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.இதன்மூலம் 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் ரயில் சேவை கிடைக்கும் வகையில் ரயில் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் RRTS எனப்படும் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு சேவையை கிருஷ்ணகிரி வழித்தடத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர NCRTC பரிந்துரை செய்துள்ளது. இது பெங்களூர் , ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி இடையில் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
மொத்தம் 138 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட ரயில் பாதை அமைக்கப்படும். இது பார்ப்பதற்கு மெட்ரோ ரயில் சேவை போல இருக்கும். ஆனால் எக்ஸ்பிரஸ் போல அதிவிரைவாக பயணிக்கும். சராசரியாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் RRTS ரயில்கள் செல்லும். அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும். மெட்ரோ ரயில்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும். RRTS ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் வரும் வகையில் செயல்படுத்தப்படும். இந்த ரயில் சேவை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கிடைத்தால் புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
புதிய வழித்தடங்களில் விரைவான போக்குவரத்து சேவை கிடைக்கும். குறிப்பாக ஓசூரில் மட்டும் 2,300க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மாநிலத்தின் மொத்த ஜிடிபியில் சுமார் 3 சதவீத பங்காற்றுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனவே வேலை விஷயமாக தினசரி பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். இதற்கு பெரிதும் பயன் தரும் வகையில் RRTS ரயில் சேவை பயனளிக்கும் என்று கூறுகின்றனர். எனவே பெங்களூர் –ஓசூர்- கிருஷ்ணகிரி –தர்மபுரி RRTS ரயில் சேவை திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.