நீட் விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா எந்த நிலையில் உள்ளது என ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆளுநர் மாளிகை பதிலளித்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டமசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அதன்படி நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள மசோதாவில் 86 ஆயிரம் பேர்களின் கருத்துக்கள், நீதிபதி ராஜன் கமிட்டியின் கருத்து போன்றவை இணைக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு அப்போது வெளியிட்ட அறிக்கையில், “நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மசோதா பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தபோது தமிழக அரசால் அனுப்பப்பட்டது. ஆனால் செப்டம்பர் 18ஆம் தேதி தமிழகத்திற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். இதையடுத்து நவம்பர் 27ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை சந்தித்து நீட் விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், நீட் விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா எந்த நிலையில் உள்ளது என ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆளுநர் மாளிகை பதிலளித்துள்ளது. அதில், தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு கோரும் மசோதா கோப்பு கவர்னர் ஆர்.என்.ரவியின் பரிசீலனையில் உள்ளது என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்ட பெண்ணின் தந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்பு
kareena kapoor Covid-19: கரீனா கப்பூருக்கு ஒமிக்ரான் தொற்றா? மரபணு வரிசை செய்ய முடிவு