திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 38 வயது பெண், இவர் மத்திய ஆப்ரிக்காவின் காங்கோ நகரத்தில் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண் தனது பெற்றோரை பார்ப்பதற்காக கடந்த 12 ஆம் தேதி தனது கணவர் மற்றும் மகனுடன், விமானம் மூலம் சென்னைக்கு வந்து, பின்னர் ஆரணி அடுத்துள்ள கிராமத்திற்கு சென்றார். ஆப்ரிக்கா நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், காங்கோ நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த 15 ஆம் தேதி வெளியானதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒமிக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, அந்த பெண் ஒமிக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பதை கண்டறிய, பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த தாய், தந்தை, தம்பி மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு, ஆரம்பசுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேற்று கொரோனா பரிசோதனை செய்தனர், ஒமிக்ரான் தொற்று அறிகுறி கண்டறியப்பட்ட பெண்ணின் 65 வயது தந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட தொற்றுநோய் வல்லுநர் சிவஞானம் தலைமையில் எஸ்.வி.நகரம் வட்டார மருத்துவ அலுவலர் சுதா, வட்டார சுகாதார மேற் பார்வையாளர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கார்த்திகேயன் ஆகியோர் கிராமத்தில் முகாமிட்டு. சுகாதார பணிகளை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். மேலும், அப்பகுதியை சேர்ந்த 86 நபர்களுக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டு அவர்களது சளி மாதிரிகளை எடுத்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆர்டிஓ கவிதா துணை காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் ஆகியோர் தலைமையில் தாசில்தார் பெருமாள், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் வரை பேரிகார்டு மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.