பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விரைவு நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி  உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுஜி என்கிற காசி.  27 வயதாகும் இவர், சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் வடசேரி, நேசமணிநகர் காவல் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்றும், எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்குகள் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.


இந்த புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது. 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சி  அளிக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.


சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்ட பின் நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இயற்கை மரணம் அடையும் வரை காசிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. காசியின் தந்தை தங்கபாண்டியன் விடுதலை செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசி மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் படிக்க 


Senthil Balaji Arrest: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை எதிர்த்த வழக்கு.. ஜாமீன் மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு..!


NEET UG 2023 Result: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; தமிழ்நாடு தேர்ச்சி விகிதம் எப்படி?- புள்ளிவிவர அலசல்