குளித்தலை அருகே வேங்கம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


 




கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேங்காம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள் தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திம்மாச்சிபுரம் காவிரி நதிக்கரையில் இருந்து தீர்த்தக்குடம் பால்குடம் எடுத்து நதிக்கரையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்த பிறகு கோவிலுக்கு வந்தடைந்தனர். கோவிலை சுற்றி வந்து ஸ்ரீ மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து அவர்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


 




 


கரூரில் ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழா 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று நடனம் ஆடினர்.


 




கரூர் அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பாரம்பரிய  உடையணிந்து முளைப்பாறியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை காட்டப்பட்டது.  அதன் பின்னர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள் மாறி மாறி ஈசன் வள்ளி கும்மி ஆடினர். தொடர்ந்து ஒயிலாட்டம் ஆடினர். இதில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். திரளான மக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.