பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில், தமிழ்நாடு மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். முதல் 10 இடங்களில் 4 மாணவர்கள் இடம்பெற்றாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்று காணலாம்.
நாடு முழுவதும் நீட் தகுதித் தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் 99.9999019% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடன் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தியும் முதலிடம் பிடித்துள்ளார்.
அதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த கவுஸ்தவ் பவுரி - 716 மதிப்பெண்கள், சூர்யா சித்தார்த் - 715 மதிப்பெண்கள், வருண் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முறையே 3, 6 மற்றும் 9ஆவது இடங்களைத் தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர்.
நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 513 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 936 மாணவர்களும், 13 மாற்றுப் பாலினத்தவர்களும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 462 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். இதில் 20,38,596 பேர் தேர்வை எழுதினர். இதில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு நிலவரம்
தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 583 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1,44,516 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுவே கடந்த ஆண்டு 1,21,617 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து, அதில் 99,610 பேர் தேர்வை எழுதினர். அதில் இருந்து 57,215 தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தேர்ச்சி விகிதம் எப்படி?
நீட் தேர்வில் தேசிய அளவில் சராசரி தேர்ச்சி விகிதம் 56.2% ஆக உள்ள நிலையில், தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 54.45% ஆக உள்ளது. தேர்ச்சி விகிதத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம், குஜராத், ஜார்க்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களை முன்னுக்குத் தள்ளி, தமிழ்நாடு 21ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
தமிழ் மொழியில் எழுதியோர்
தமிழ் மொழியில் 30,536 மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இது 2019-ல் 1017 மாணவர்கள் ஆகவும் 2020-ல் 17,101 ஆகவும் இருந்தது. அதேபோல 2021-ல் 19,868 மாணவர்களும் 2022-ல் 31,965 மாணவர்களும் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
சாதி வாரியான தேர்வு முடிவுகள்
ஓபிசி மாணவர்கள் 8,90,150 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 8,73,173 பேர் தேர்வை எழுதினர். இதில் 5,25,194 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவு மாணவர்கள் 6,07,131 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 5,92,110 பேர் தேர்வை எழுதினர். இதில் 3,12,405 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,03,318 எஸ்சி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, அதில் 2,94,995 பேர் எழுதிய நிலையில், 1,53,674 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எஸ்டி மாணவர்கள் 1,32,490 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 1,26,121 பேர் தேர்வை எழுதினர். இதில் 56,381 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,54,373 பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, அதில் 1,52,197 பேர் எழுதிய நிலையில், 98,322 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு குறித்த முழுமையான புள்ளிவிவரத்தை அறிய: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2023/06/2023061375.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.