செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மனு மீது நாளை உத்தரவு வழங்கப்படும் என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


செந்தில் பாலாஜி கைது செய்ததை எதிர்த்து திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வாதம் செய்தார். அப்போது அவர், “ செந்தில் பாலாஜியை கைது செய்ததில், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. சோதனையின் போது செந்தில் பாலாஜி சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் வழக்கறிஞர்களை கூட அனுமதிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மட்டுமின்றி தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தி உள்ளது. 


நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை வரை செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். பிரிவு ஐம்பத்தின்படி சம்மன் கொடுத்து விசாரணை நடத்தாமல் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.? கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டிய நடைமுறையை பின்பற்றவில்லை” என தெரிவித்தார். 


அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதம் செய்கையில், “ எதற்காக கைது செய்தோம் என்பது குறித்த காரணங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தோம். கைது செய்வதற்காக அவரிடம் மெமோ அளித்த பொழுது அதைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்தார். நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை நிராகரிக்க கூற முடியாது. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்க வேண்டும். ரிமாண்ட் உத்தரவு சரியானது. இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர், இன்று திடீரென உடல்நலக்குறைவு என்கிறார்"என அமலாக்கத்துறை சார்பில் வாதம் செய்யப்பட்டது. 


இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். 


தொடர்ந்து, திமுக தரப்பு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களை சந்திந்தபோது, “ ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கை மீது நம்பிக்கை இல்லை என்றது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜிக்கு பைபாச் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் 15 நாள் காவலில் எடுத்து விசாரிப்போம் என்கிறது அமலாக்கத்துறை. நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது காவிரி மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


கைது செய்வதற்கு முன் 41 - ஏ நோட்டீஸ் அளிக்கவில்லை..? 


கைது செய்வதற்கு முன் 41 - ஏ நோட்டீஸ் ஏன் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு அமலாக்கத்துறையிடம் பதில் இல்லை. அமலாக்கத்துறை மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் உறுதி செய்து அளித்த மருத்துவ அறிக்கை பற்றி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.” என தெரிவித்தனர்.